எங்களுக்குள் முரண்பட்டு ஆவது ஏதும் உண்டோ!
Share
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இப்போது எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சிந்திப்பதில்லை – கதைப்பதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை தத்தம் கட்சிப் பூசல்களை வெட்டியாடுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதைவிட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதிலும் அவர்களின் நேரம் செலவாகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து இனப் பிரச் சினைக்கான தீர்வு பற்றிப் பேசுவதற்கோ அன்றி தீர்வை வலியுறுத்துவதற்கோ அவர் கள் தயாரில்லை.
மாறாக, தேர்தல் வரும்போது மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிக் கதைப்பார்கள். மற்றும்படி இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய நினைப்பு அவர்களிடம் இம்மியும் இல்லை எனலாம்.
அண்மையில் கூட, தமிழ் அரசியல் கட்சிகள் ஏதோ சுறுசுறுப்படைந்ததுபோல நடந்து கொண்டன.
என்ன சங்கதி; திடீரென தமிழ்க் கட்சிகள் உசாரடைந்துள்ளனவே என்றால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் அவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.
என்ன செய்வது காலப்பிழை போல இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல் சாத்திய மாகாதென்பது தெரிகிறது.
இதனை அறிந்து கொண்ட நம் தமிழ் அரசியல் தரப்புகள் இப்போது மௌனமாகி விட்டன. இனி அவர்களின் மௌனம் மாகாண சபைத் தேர்தல் வரும்போது கலையும்.
தவிர, தேர்தலுக்கு முன்பான அவர்களின் பணி தமிழர்களின் அரசியலைக் கந்தறுப்பது மட்டுமே. இப்போது கூட தமிழ் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத்தலைப்பட்டுள்ளன.
அதிலும் அவர்களில் சிலர் வழங்குகின்ற செவ்விகளைப் பார்த்தால், இந்த ஜென்மத்தில் இவர்களால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது என அறுதியிட்டுக் கூறமுடியும்.
அந்தளவுக்கு அரசியல் நாகரிகம் இல்லாமல், மக்கள் சமூகம் தங்களின் கருத்துக்களை உற்றுக் கவனிக்கும் என்று அறியாமல், வேலிச் சண்டை பிடிப்பதுபோல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கின்ற நிலைமை காணப்படுகிறது.
இத்தகைய நிலைமையானது “தகுதியற்ற தமிழ் அரசியல்” இருப்பதையே சுட்டி நிற்கும்.
உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமாயின் நம் அரசியல் வாதிகள் இடையறாது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்துக்கூறுவது, இந் தியாவுக்குச் சென்று இந்தியத் தலைவர்களைக் சந்திப்பது, இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியத் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பது.
எங்களின் அவல நிலையை – காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னமும் எதுவும் நடந்தாகவில்லை என்பதை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகளிடம் எடுத்துக்கூறுவது என்றவாறு அயராத முயற்சிகள் நடந்தாக வேண்டும்.
இதைவிடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி எதுவும் சிந்திக்காமல், நமக்குள் நாம் முரண்பட்டு, சுய அரசியல் இலாபத்தை மட்டும் சதா நினைத்திருந்தால், எங்கள் இனத்துக்கு எந்த நன்மையும் ஏற்படமாட்டாது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


