Type to search

Editorial

இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனின் வருகை

Share

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கிற்கும் வருகை தர இருப்பது மகிழ்வைத் தருகிறது.

பாரதிய ஜனதா கட்சி சார்ந்த சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் அதீத கருசனை கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இஃது ஒரு புறமிருக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது, நம் யாழ்ப்பாண மண்ணுக்கும் வந்திருந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது வரலாற்றுப் பதிவாகியது.

இப்போது தமிழரான இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் வடக்கு கிழக்கிற்கு வருகை தருவதனூடு இந்திய உப ஜனாதிபதிகளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த முதலாவது இந்திய உப ஜனாதிபதி என்ற வரலாற்றுப் பதிவை சி.பி.இராதா கிருஷ்ணன் தனதாக்கியுள்ளார்.

ஆம், எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர்; வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவுக்கும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும் செல்வார் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவுக்கு அவர் விஜயம் செய்வது மிகவும் பொருத்த மானது.

ஆம், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடத்திய 2009 களில் எங்கள் ஈழத் திருநாட்டில் தமிழின அழிப்பு இடம்பெற்றது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ஆகியோர் தமிழ் மக்கள் வாழும் வன்னிப் பெருநிலப்பரப்பை முப்படைகள் மூலம் துவம்சம் செய்தனர்.

இதற்கு இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகராக இருந்த சி.பி.இராதாகிருஷ் ணன் அவர்கள் எம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தார்.

ஈழத் தமிழ் மக்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அதே இராதாகிருஷ்ணன் இப்போது இந்திய நாட்டின் உப ஜனாதிபதி. தவிர, அவர் கொழும்புக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் வருகை தரவுள்ளார்.

அவரின் வருகை யாழ்ப்பாணத்துக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

இது விடயத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம் போன்ற பெரியவர்கள் இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்கு மேலாக, நம் மண்ணுக்கு வருகின்ற இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனிடம் எங்களின் இனப்பிரச்சினை – அதற்கான தீர்வு – அதில் பிரதமர் மோடியை தலையிடுமாறு வலியுறுத்தல் – அதன் பொருட்டு நம் தமிழ் அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நம் தமிழ் அரசியல் தரப்புகள் ஒற்றுமையாகச் சந்தித்து கேட்க வேண்டும். இந்த அரியவாய்ப்பை வழமை போல தவறவிட்டு விடாதீர்கள்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link