தரிசனம்
Share
இந்து ஆலயங்களிலும் அவற்றின் பரிபாலனங்களும் 5
அந்நியராட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிங்களவர்கள் மீளவும் பெளத்தத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அதேநேரம் தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள், பெளத்த மதத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் ஒரு போதும் மறந்தும் மறுத்தும் விடலாகாது.
ஆம், அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்த போது, பெளத்த மதத்திற்கான அதிகாரம் எந்த வகையிலும் குறையாதவாறு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமெனக் கூறியவர் கொழும்பு பேராயர் மல்கம்றஞ்சித் ஆண்டகை என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும்.
ஆம்,அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போது, பெளத்த பீடங்கள் கிஞ்சித்தும் நினைக்காத விடயத்தை கொழும்புப் பேராயர் முன்னிலைப்படுத்திக் கூறினாரெனில் சிங்களக் கத்தோலிக்கர்கள் மானசீகமாக இன்னமும் பெளத்தர்களாகவே வாழ்கின்றனர் என்ற உண்மை உறுதியாகின்றது.
இதேநேரம் எங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பிறமதங்கள் சைவ சமயத்தை எதிர்ப்பதில் மிகவும் தீவிரமாகச் செயற்படுகின்றன என்பது தான் எங்கள் இனத்தின் பெரும் சாபக்கேடு எனலாம்.
உண்மை. மன்னார் திருக்கேதீச்சரத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வளைவை உடைத்து, தள்ளி விழுத்தி நந்திக் கொடிகளை சப்பாத்துக் கால்களால் உளக்கியவர்கள் வேறுயாருமல்ல. மன்னார் மறை மாவட்டத்தின் அருட் பணியாளர்கள் சிலரும் அங்குள்ள கத்தோலிக்கர்கள் சிலரும் என்ற கசப்பான உண்மை ஒருபோதும் மறப்பதற்குரியதன்று.
இத்தகைய மோசமான சம்பவத்தை யாழ்ப்பாண ஆயர் இல்லம் கண்டித்தது.
இக்காரியம் எந்த வகையி லும் ஏற்புடையதல்லவென திருமறைக் கலாமன்றத்தின் இயக்குநராக இருந்து தேகவியோகமடைந்த போற்றுதலுக்குரிய மரியசேவியர் அடிகளார் மனவேதனையோடு குறிப்பிட்டார்.
எனினும் திருக்கேதீச்சர நுழைவாயில் வளைவு உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு யாழ்ப் பாண ஆயர் இல்லம் கண்டனம் வெளியிட்டதற்கு மன்னார் ஆயர் இல்லம் கடும் கோபமுற்று, எங்கனம் கண்டனம் தெரிவிக்க முடியும் என கொதித்தெழுந்தனர் எனும் போது, சைவ சமயத்தை வேரறுக்க மன்னார் ஆயர் இல்லம் எத்துணை தூரம் முயற்சிக்கிறதென்பது இதனூடு புரிகிறதல்லவா.
இங்கு தான் இத்துணை சம்பவம் நடந்தும் நம் தமிழ் அரசியல் தரப்பினர் எவரும் திருக்கேதீச்சர வளைவு உடை க்கப்பட்டதை கண்டித்ததுமில்லை. அதுபற்றி வாய்திறந்து கதைக்கவுமில்லை.
ஆம், சைவம் அழிந்தாலும் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை. கத்தோலிக்க மக்க ளின் வாக்குகள் தமக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பது தான் தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோளாயிற்று.
ஆயினும் மேற்படி திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் நீதி மன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் திருக்கேதீச்சர ஆலயத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வழக்காடுவதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக த்தான் வேண்டும்.
இது மட்டுமல்ல, யாழ்ப்பாணம் பண்ணையில் நாக பூசணி அம்மன் சிலை வைக் கப்பட்ட போது, அதனை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ்.மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து வாதிடுவதற்கு இந்து அமைப்புகள் முன்வந்தன.
இதற்கான விசேட கூட்டம் நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த வழக் கில் சட்டத்தரணிகள் முன்நிலையாகினர்.அவர்களின் வாதம் அம்மன் சிலையை அகற்றுவது சைவ மக்களின் மனங்களைப் பாதிப்பதாக இருக்கும் என்பதாக அமை ந்திருந்தது.
அதிலும் குறிப்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா அந்தக் கருத்தை நீதி மன்றத்தில் முன்வைத்தார். எனினும் அந்தவாதத்தை பொலிஸார் மறுதலித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எழுந்து; யாழ்ப்பாணம் பண்ணை யில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என்பதை நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இந்த வழக்கு யாழ்.மாவ ட்ட நீதிமன்றில் நடைபெற்ற போது, யாழ்.மாவட்ட நீதிபதியாக இருந்த ஏ.ஆனந்தராசா அவர்கள்; யாழ்.பண்ணையில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்ற வேண்டியதில்லை. அதை அகற்றுமாறு கோருகின்ற மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்கின்ற நியாயாதிக்கம் பொலிஸாருக்குக் கிடையாது எனத் தீர்ப்பளித்தார்.
இதை இங்கு நாம் கூறுவதற்குக் காரணம் வரலாறுகள் அந்தந்தக் காலத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் உண்மைகள் திரிவுபட்டுப் போகும் என்பதனாலாகும்.
தொடரும்…


