Type to search

News Sports World News

ஆசிய குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்

Share

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மீனாட்சி, பிரீத்தி, பிரியா, அருந்ததி ஆகியோர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை பந்தாடி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

54 கிலோ எடைப்பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் 3 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான சீன தைபேயின் ஹூவாங் சியாயோ வென்னை சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரியா 3-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவின் வோன் அன்கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். 70 கிலோ எடைப்பிரிவில், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

57 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தின் புன்ரவீரூன்ரோசிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதேபோல் 80 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அல்பியா பதான் 0-5 என்ற கனக்கில் கஜகஸ்தானின் டினா இஸ்லாம்பெகோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. ஏற்கனவே இந்திய வீராங்கனைகள் நிகாத் ஜரீன் (54 கிலோ), அங்குஷிதா போரோ (65 கிலோ), லவ்லினா போர்ஹைன் (75 கிலோ), பூஜா ராணி (80 கிலோ) வெண்கலப்பதக்கம் வென்று இருந்தனர்.

இன்று நடைபெறும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் (48 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ) ஆகியோர் களம் காணுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link