Type to search

Articles Headlines தரிசனம்

தரிசனம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை 3

யாழ்.போதனா வைத்திய சாலையில் மருத்துவ நிபுணர்கள் நோயாளர்களைப் பார்வையிடுவதாக இருந்தால், வைத்தியசாலை விடுதியில் தங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

நோயாளர்களைப் பொறுத்தவரை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்று, உடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

எனினும் நோயாளர்களின் அந்த நோக்கம் யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகக் கட்டமைப்பில் சாத்தியமாகாது எனும் போது, தனியார் வைத்தியசாலைகளை நாடு கின்ற நிலைமை ஏற்படுகின்றது.

பொதுவில் நம் தமிழ்ச் சமூகம் என்பது சோலிகளுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது.

அவர்களால் ஒரு மணி நேரத்தை ஒதுக்குவதென்பது கூட முடியாத காரியம். அதிலும் ஓய்வு நேரம் என்ற விடயம் அவர்களின் அகராதியில் இல்லை.

இந் நிலைமையானது மனித வாழ்வியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

இதன் காரணமாகவே ஒரு நாளும் மருத்துவ பரிசோதனையை – வைத்தியசாலைப் படிகளை தாண்டாமலே குறிப்பிட்ட இளம்வயதினர் திடீர் மரணத்தைச் சந்தித்துள்ளனர்.

எனவே வைத்தியசாலை விடுதியில் தங்குவதை நம்மவர்கள் விரும்பாத காரணத்தால், வைத்திய நிபுணர்களைத் தனியார் வைத்தியசாலைகளில் சந்திப்பதற்கான உந்தல் ஏற்படுகின்றது.

இதற்கு மேலாக, யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று நான்கு நாட்களாக விடுதியில் தங்கி இருந்த போதிலும் “பெரிய டாக்குத்தர் இன்னமும் பார்க்கவில்லை. அவர் பார்த்த பின்புதான் துண்டு வெட்டுவது பற்றித் தீர்மானிக்கப்படும்” என்ற அப்பாவி நோயாளர்களின் வாக்கு மூலத்தை இன்னமும் வைத்தியசாலைச் சுவர்கள் காது குடுத்துக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

இஃது அனைத்து மருத்துவ நிபுணர்கள் சார்ந்த கருத்தாக இல்லாவிட்டாலும் மேற் போந்த விடயம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் அதிகமானவர்களால் உச்சரிக்கப்படுவது என்பது நிராகரிக்க முடியாத உண்மை.

இங்குதான் தனியார் வைத்தியசாலைகள் ஒருபடி மேல் சென்று, நோயாளி அனுமதிக்கப்பட்ட அடுத்த கணமே மருத்துவ நிபுணர்களின் தரிசனத்தை நிதர்சன மாக்குகின்றன.

இந்த நிலைமை நாள் கடக்க கடக்க தனியார் வைத்திய சாலைகளிலும் தோல்வி காண்பதாக இருந்தாலும் நோயாளியை அனுமதித்தவுடன் அங்கு நடந்தாகின்ற படோப காரங்கள் – சுற்றிச் சூழ்ந்து நிற்கும் தனியார் வைத்திய சாலைப் பணியாளர்கள் என, ஏதோ போன உயிரையும் மீட்பது போல தடல் புடல் நடப்பதால், நம்மவர்களும் அந்த போலிக்குள் புதையுண்டு போகின்றனர்.

இங்கு தான் காசு போனாலும் பரவாயில்லை தனியார் வைத்தியசாலைக்குப் போக லாம்.

அங்கு அனுமதிக்கப்பட்டால், நோயாளியுடன் நின்று பராமரிப்பதும் சுலபம் என்ற கட்டத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலைகள் தேர்த் திருவிழா போல ஆகிவிடுகின்றன.

இங்குதான் மாற்று வழிகள் பற்றி யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆட்படுகின்றது.

ஆம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் கிளினிக் வருகின்றவர்கள் ஒரு புறமிருக்க, வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கின்ற நோய் நிலையுடன் வருகின்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது இங்கு முதன்மைக்குரியதாகிறது.

அதாவது, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு கடுமையான நோயுடன் வருகின்றவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கின்ற நடைமுறை உண்டு.

முன்பு அவசர சிகிச்சை என்பதாக இருந்த பிரிவு இப்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

இப் பிரிவில் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போது மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பிற்குள் நோயாளர்கள் வந்து விடுகின்றனர்.

இந் நிலைமையானது நோயார்களின் குடும்பத்தினரை – அவர்களின் நெருங்கிய உறவினர்களை ஆற்றுப்படுத்துகிறது.

அதாவது, நோயாளியை மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்களின் தீவிர கண்காணிப் பிற்குள் இப்போது நோயாளி இருப்பதால், அங்கு ஒரு பலமான நம்பிக்கை ஏற்படுகிறது.

தவிர, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளி, மருத்துவக் கண்காணிப்பினூடு கூடிய சிகிச்சையில் குணமடைந்துவிட்டால், அந்த நபர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தவாறே வீடு செல்வதற்கான சந்தர்ப்பம் உண்டு.

இது சம்பந்தப்பட்டவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆத்ம திருப்தியை அளிப்பதுடன் தங்கள் உறவின் உயிரை யாழ். போதனா வைத்தியாசாலை காப்பாற்றியது என்ற உணர்வும் பொது வெளியில் ஏற்படுகிறது.

எனவே அவசர சிகிச்சைப் பிரிவை விஸ்தரித்து அதற்கான வள ஒதுக்கீடுகளைச் செய்யும் போது, யாழ்.போதனா வைத்திய சாலையின் நுழைவாயிலைக் கடந்த கணத்திலேயே மருத்துவ உதவி- மருத்துவ சிகிச்சை கிடைத்ததான மன நிம்மதியும் பொது மக்களிடம் ஏற்படும்.

இஃது யாழ்.போதனா வைத்தியசாலை மீதான நம்பகத்தன்மையை பொது மக்கள் மத்தியில் பரவலாக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

தொடரும்…

Previous Article
Next Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link