Type to search

Articles Headlines தரிசனம்

தரிசனம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை 1

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை.

ஆக, ஜனநாயகம் எனும் பெரும் கட்டுமானம் பலத்துடனும் பயன்தருவதாகவும் இருக்க வேண்டுமாயின், அதன் தாங்கு தூண்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும்.

எனவே பத்திரிகை எனும் தூண் பலமாக இருக்கும் போது தான் ஜனநாயகம் பலம் பெறும் – பயன் தரும்.

எனினும் சமகாலத்தில் பத்திரிகை உள்ளிட்ட ஊடகத்துறை குறை காண்பதையே தமது பணியாகக் கருதிச் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உண்டு.

குறை அளப்பது மட்டும் தான் ஊடகத்துறையின் பணியா?

எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்திருந்தும் அதுபற்றிப் பேசாமல், தனித்து குறை கூறு வதையே தொழிலாகக் கொண்டால், இந்த மண்ணில் இருந்து சேவையாற்ற யாரேனும் முன் வருவார்களா? என்ற கேள்வியும் பொது மக்களிடம் இருக்கவே செய்கிறது.

இதையும் கடந்து, பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் மற்றவர்களின் சுய கௌரவத்திற்குக் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்- உத்தியோகத்தர்கள்- அவர்களின் குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளன.

இஃது ஊடக தர்மத்திற்கு உகந்ததா? என்ற வினாக்கள் பதிலின்றித் தொடர்கின்றன.

இஃது ஒருபுறமிருக்க, ஒருவர் சார்ந்து அல்லது ஒரு நிறுவனம் சார்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் போது, சம்பந்தப்பட்டவரின் அல்லது சம்ப ந்தப்பட்டதரப்பின் கருத்துக்களையும் அறிந்து அவற்றையும் உரிய முக்கியத்து வத்துடன் பிரசுரிப்பது தான் ஊடக தர்மம்.

ஆனால் அதை எந்த ஊடகங்களும் பின்பற்றுவதில்லை என்ற வேதனையோடு கூடிய பெரு மூச்சுக்களின் கனலும் சுடவே செய்கின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வலம்புரி “தரிசனம்” என்ற பகுதியை இங்கு முன் வைக்கின்றது.

ஆம், இது சாதாரணமான தரிசனமன்று. விசேட தரிசனம். குறைகளைச்சுட்டிக் காட்டுவதுடன் அதை நிவர்த்திக்கின்ற வழிவகைகளையும் முன்வைப்பதற்கானது.

மேலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் – உத்தியோகத்தர்கள் – நிறுவனங்கள் தமது தரப்பு நியாயங்களை அல்லது தாம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களை- மாற்று ஏற்பாடுகளை பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான களமாகவும் இத் “தரிசனம்” அமையும்.

இத்தரிசன களத்தை புரிதலுடன் பயன்மிக்க தாகவும் இருதரப்புக் கருத்துக்களும் சங்கமிக்கின்ற ஒரு புதிய பண்பாட்டுச் சூழலுடனும் தரிசிக்க நாம் தயாராகுவோம்.

ஆம், தரிசனம் உங்களின் வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் உள்ளடக்கியது என்பது மனங்கொள்ளத்தக்கது.

இப்போது தரிசனத்திற்கான கதவு திறக்கப்படுகிறது.

இனி இது அடையா நெடுங்கதவாகி தரிசனத்திற்கு வழிவிடும்.

அந்த வகையில் முதலில் எங்கள் மண்ணின் முதன்மைக்குரிய இடமாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தரிசிப்பது பொருத்தமும் தேவையும் எனக் கருதுகின்றோம்.

ஆம், யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை எங்கள் தமிழ் இனத்தின் பெரும் சொத்து.

அங்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு முன்னேற்றங்களும் எங்கள் உயிருக்கான உத்தரவாதங்கள். அதேநேரம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை நிர்வகிப்பதென்பது சாதாரண விடயமன்று.

கற்றறிந்த மருத்துவர்கள் உட்பட துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எனப் பரந்து விரிந்து சாதாரண சுத்திகரிப்புத் தொழிலாளர் வரையில் நிர்வாகம் வியாபிக்கின்றது.

தவிர, பல்வேறு இடங்களில்- வெவ்வேறு சூழல்களில் இருந்து வரக்கூடிய நோயாளர்கள் என, எல்லாவற்றையும் உள்ளீர்த்து உன்னதமான மருத்துவ சேவையை வழங்கி உயிர் காக்கின்ற பணிக்கான நிர்வாகத்தை எவரும் சாதாரணமாகக் கருதிவிடவும் முடியாது.

அதேநேரம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, நம்பி வருகின்ற நோயாளர்களுக்கு உடனடியாக- உரிய சிகிச்சை வழங்கி அவர்களின் உயிரைப் பாதுகாப்பதென்பது தான் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிக்கூற்றாக அமையும்.

ஒரு காலத்தில் கட்டிட வசதிகள் இல்லாமை தொடர்பில் சிலாகிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலை இப்போது மூச்சு விட முடியாத அளவில் கட்டிடங்களால் நிரம்பி வழிகின்றன.

கூடவே, மருத்துவப் பிரிவுகள், கிளினிக்குகள், சத்திர சிகிச்சைக்கான விஸ்தரிப்புகள் என மருத்துவ வசதிகள் பல்கிப் பெருகியுள்ளன.

எனினும் எனது உறவினருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்படவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தோம் மருத்துவரைச் சந்திக்காமலே என் உறவின் உயிர் பிரிந்து போனது என்ற குறைபடுதலுடன் கூடிய அழு குரல்களுக்கும் யாழ். போதனா வைத்தியசாலையில் பஞ்சமில்லை என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும்.

தவிர, என்னதான் இருந்தாலும் யாழ்.போதனா வைத்தியசாலை தான் எங்களின் தஞ்சம். என்னுடைய உயிரை-என் உறவின் ஆன்மாவை காப்பாற்றக் கூடிய ஒரே இடம் யாழ்.போதனா வைத்தியசாலை தான் என்ற நம்பிக்கையோடு வீட்டில் இருந்து வெளிக்கிடுகின்ற அந்த கணத்தின் பெறுமதியை யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒட்டு மொத்தச் சமூகமும் மானசீகமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த உணர்தலும் புரிதலும் எழுகின்ற போது யாழ்.போதனா வைத்திய சாலையின் மூலை முடுக்கெங்கும் அன்பும் இரக்கமும் பரிவும் பாய்ந்தோடும்.

ஆயினும் அந்த உன்னதமான நிலை ஏற்பட்டு விட்டதா? என்றால் இல்லை என்ற பதிலுக்குள் பல காரணங்கள் புரையோடியுள்ளன.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link