Type to search

Editorial

வரப்போகின்ற ஆபத்தை மனமே! உணர்ந்திடுவாய்

Share

மனம் பற்றிப் பேசாத ஞானிகள் இல்லை. ஒரு மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனின் மனமே மூலகாரணமாக அமைகிறது.


அதனாலேயே மனமது செம்மையானால் மந்திரங்கள் செப்ப வேண்டாம் என திருமூலர் அறிவுரை வழங்கினார்.


எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும் அதனைச் செயல்படுத்தக் கூடிய மனப்பாங்கு இல்லை எனில், அறிவால் எந்தப் பயனும் ஏற்படமாட்டாது.


ஆதலால்தான், நம் ஞானிகள் மனமே கேள்! என மனதுக்கு அறிவுரை செய்தனர்.
இதில் பட்டினத்தடிகள் மனமே! என விழித்துப் பல தடவைகள் மனதை வழிப்படுத்தும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவரின் ஒரு பாடலில்
… இனிக் கேள் மனமே! … எனப் பட்டினத்தடிகள் பேசுவதில் இருந்து மனதை வழிப்படுத்துவதன் அவசியம் உணரப்படுகிறது.


இப்போது நம் நாட்டை உலுப்புகின்ற கொரோனாத் தொற்று மென்மேலும் வேகமெடுத்து வருவதைக் காண முடிகிறது.


நாளுக்கு நாள் தொற்றாளர்களின் தொகை அதிகரிப்பதும் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்வுற்றுச் செல்வதும் மிகப் பயங்கரமானது.


இருந்தும் அந்த ஆபத்தை உணர்ந்து கொண்டு கொரோனாத் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் நாம் மனப்பூர்வமாகச் செய்யவில்லை என்பதை இங்கு கூறித் தானாக வேண்டும்.


அதாவது கொரோனாத் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாப்பதற்கான உபாயங்கள் என்ன? என்ற அறிவு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.


ஆயினும் அதைப் பின்பற்றுகின்ற மனப்பாங்கு பூச்சியமாகவே இருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன? என்று கேட் டால்,
கொரோனா பற்றிய அறிவுரைப்பு வழங்கப்படுகின்றதே தவிர, அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய மனப்பாங்கு மக்களிடையே உருவாக்கப்படவில்லை என்பதுதான் பதில்.


ஆக, கொரோனாத் தொற்று வேகமெடுத்து நாடு முழுமைக்கும் பரவுமாயின், அதனால் ஏற்படக்கூடிய உயிராபத்தை மனமே! உணர்ந்து கொள்.


மனமே! எனக்கு கொரோனா வராது என்ற நினைப்பு பேதமையின் பாற்பட்டது என்பதை தெரிந்து கொள்.
கொரோனாத் தொற்று எங்களைத் துரத்தி வருகிறது. இதிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான உபாயங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற உண்மையை மனமே! நீ உணர்ந்து கொள்.


ஓ! மனித மனமே! இந்த உலகில் உன் உயிரை விடப் பெறுமதியானது வேறு எதுவுமில்லை.
உன் உயிருக்கு வரவிருக்கின்ற ஆபத்து எதுவென நீ அறிந்திருக்கிறாய். ஆகையால் நீ பக்குவப்பட்டு கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய அத்தனை வழி முறைகளையும் பின்பற்று. அதுவே சுகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link