Type to search

Editorial

எடுத்த கருமங்களை இடைநிறுத்த வேண்டா!

Share

சமகாலக் கொரோனாத் தொற்றால், நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் தினத்தை நடத்த முடியாதுள்ளதாக பெளத்த சாசன அமைச்சு அறிவித்துள்ளது.

கெளதம புத்தபிரான் பரிநிர்வாணமடைந்த வெசாக் பெளர்ணமி புனித நாளை, நயினா தீவில் கொண்டாட முடியாமல் போயிற்று என்பதை நினைக்கும்போது எம் இதயம் கனக்கவே செய்கிறது.

கெளதம புத்தபிரான் உலகத்துக்கு தர்ம உபதேசம் செய்தவர்.
உலகப் பற்றைத் துறந்து ஞானவாழ்வின் அவசியத்தை மனித குலத்துக்கு எடுத்துரைத்தவர்.

கெளதம புத்தபிரானின் போதனைகள் அப்படியே பின்பற்றப்படுமாயின், இந்த உலகில் சண்டைக்கும் சச்சரவுக்கும் இது எனது அது உனது என்ற பேதமைக்கும் ஏது இடம்.

ஆம், இவ்வுலகம் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக; தத்துவ வாழ்வை உப தேசப் பொருளாகத் தந்த கெளதம புத்த பிரானின் போதனைகள் பெளத்த துறவிகளாலேயே பின்பற்றப்படவில்லை எனும் போது, வேதனை இதயத்தை அடைத்துக் கொள்கிறது.

பரவாயில்லை, என்றோ ஒருகால் இந்த உலகம் உண்மைப் பொருளை உணர்ந்தாக வேண்டும். அப்போதேனும் கெளதம புத்த பிரானின் பற்றற்ற ஞானவாழ்வு பற்றி மனித குலம் சிந்திக்கும் என்பது சர்வநிச்சயம்.

இவை ஒருபுறமிருக்க, தேசிய வெசாக் திருநாளை நயினாதீவில் நடத்தும் பொருட்டு நயினாதீவில் உட்கட்டுமானப் பணிகள் அவ சர அவசரமாக மேற்கொள்ளப்பட்டன.

காபற் வீதிகள் அமைத்தல், சிறு வீதி புனரமைப்பு, குறிகாட்டுவான் இறங்குதுறை யைச் செப்பனிடல், சிறுபாலங்கள் திருத்தம், பொது இடங்களுக்கு வர்ணம் பூசுதல் என ஏகப்பட்ட பணிகள் நயினாதீவில் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா காரணமாக வெசாக் திருநாளின் தேசிய நிகழ்வுகளை நயினாதீவில் நடத்துவதில்லை என அர சாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானம், நயினாதீவில் முன்னெடுக்கப்பட்டுள்ள புனரமைப்பு வேலைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதுதான் நம் தயவான வேண்டுகோள்.

அதாவது பெளர்ணமி திருநாளின் தேசிய நிகழ்வு நிறுத்தப்பட்டாலும் நயினாதீவில் எடுத்த கருமங்களை இடைநிறுத்த வேண்டாம் என்பதுதான் நம் விண்ணப்பம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link