Type to search

Sports

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Share

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது.

ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.

இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படாமல் இருந்திருந்தால், அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவியிருக்கும். என்றாலும் இரு பலம் வாய்ந்த அணிகள் கோதாவில் குதிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக விளங்குகிறது. கடைசியாக ஆடிய 11 இருபது ஓவர் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கிளைன் மேக்ஸ்வெல் ஆகியோர் மிரட்டுவார்கள். பந்து வீச்சில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன் வலுசேர்க்கிறார்கள்.

மார்னஸ் லபுஸ்சேன் பயிற்சி ஆட்டத்தில் 51 பந்தில் சதம் அடித்த போதிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ‘ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்குரிய கட்டமைப்பு தற்போது நன்றாக உள்ளது. எனவே லபுஸ்சேன் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அறிமுகம் ஆவதற்கு இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியது இருக்கும்’என்று கேப்டன் பிஞ்ச் நேற்று தெரிவித்தார்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தந்தைக்கு உடல்நலக்குறைவால் விலகியிருப்பது பின்னடைவாகும். இருப்பினும் ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் என்று திறமையான வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘இங்கிலாந்து அபாயகரமான அணி. அந்த அணியின் கேப்டன் மோர்கன் விளையாடும் விதத்தை கண்டு இருக்கிறேன். களம் இறங்கி முதல் பந்தில் இருந்தே விளாசுவதை பார்க்கவே திகைப்பாக இருக்கும். அவர்களின் சவாலை சமாளிக்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link