பங்களாதேஷின் தேசத் தந்தை கொலை ராணுவ அதிகாரிக்கு தூக்குத்தண்டனை
Share
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும் தேசத் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் ஒருவரான அப்துல் மஜேட் என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு மத்திய சிறைச்சாலையில் நேற்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
25 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் மறைந்திருந்த முன்னாள் இராணுவக் கப்டனான கொலையாளி கடந்த மாதம் பங்களா தேஷ் திரும்பிய நிலையில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார்.
விசேட பொலிஸ் குழுவினர் இவரைக் கைதுசெய்திருந்தனர்.
முன்னாள் இராணுவ அதிகாரியான மஜேட், முன்னாள் ஜனாதிபதியை மாத்திரம் கொலை செய்யவில்லை வேறு நான்கு முக்கிய தலைவர் களையும் கொலை செய்திருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றினர்.
முஜிபுர் ரஹ்மான் 1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இராணுவத்தைச் சேர்ந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த இராணுவ அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர்.
அவ்வேளை வெளிநாட்டிலிருந்த அவரது இரு புதல்விகள் மாத்திரம் இந்த ஆபத்திலிருந்து தப்பினர். இந்நிலையில் நாட்டிலிருந்து தப்பித்து தலைமறைவாகியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரியான கொலையாளி, கைது செய்யப்பட்டு நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார்.
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நிமிடத்திற்கு நமிடம் வேகமாகப் பரவிவரும் நிலையில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.