முடக்கப்பட்டிருந்த தாவடி நேற்றுடன் விடுதலையானது
Share
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் வசித்த தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை விடுவிக்கப்பட்டது.
தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.
அன்றைய தினத்தில் இருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டனர். அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகிய வர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 21 நாட்களின் பின் தாவடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,
அரியாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுள் பெரும்பாலோனாருக்கான சுய தனிமைப்படுத்தற் செயற்பாடுகள் 23.03.2020 முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றையதினம் (நேற்று) அவர்கள் தத்தமக்குரிய சுயதனிமைப்படுத்தற் காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதைத் தொடர்ந்து அவர்களுக்கான சுய தனிமைப் படுத்தல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தின் முதலாவது கோவிட்-19 நோயாளியின் வதிவிடத்தைச் சூழ தாவடிப் பகுதியில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனாலும் தேவாலயத்திற்கு சுவிற்சர்லாந்திலிருந்து வருகை தந்து தொற்றுக்கு மூலகாரணமாக இருந்தவருடன் தனிப்பட்ட வகையில் நெருங்கிய தொடர்பிலிருந்த வர்கள் என்ற வகையில் 20 பேர் காங்சேசன்துறையில் நிறுவனத் தனிமைப்படுத் தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அவர்களில் 06 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்கள் உரிய சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனைய 14 பேருக்கான தனிமைப்படுத் தல் காலம் 23.04.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்குரிய ஆய்வுகூடப் பரிசோதனைகளும் மீளச்செய்யப்படவுள்ளன.
தேவாலய நிகழ்வுகளால் தனிமைப்படுத்தப்பட்ட ஏனையோருக்கும் படிப்படியாக ஆய்வுகூடப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.