பல்லாயிரக்கணக்கான தொற்றாளர்கள் வெளிப்படாமல் நாட்டில் உள்ளார்கள்
Share
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கம் களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் சுகா தார நெருக்கடி நிலை தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிப்படாமல் பல்லாயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் காணப் படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சுகாதார அதிகாரிகள் இது குறித்து உடனடியாக கவனமெடுக்கத் தவறினால் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் குறித்த வைரஸ் பரவல் அதிகரிக்கும் என அச்சம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ அவதானிப் புக்களின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பரவல் இம்மாதக் கடைசி வரையில் பரவுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் உடனடியாகவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அதிகாரிகள் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டு அல்லது இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அடுத்த வாரங்களில் குறித்த வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப் படுத்துவது அவ்வளவு எளிதல்ல எனவும் குறித்த சங்கத்தினால் எதிர்வு கூறப்பட் டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிலைவரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹாலித்த அளுத்கே, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உட்படுத் தப்பட்டுள்ள நபர்கள் மீள் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களது வீடுகளிலேயே கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.