தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும்
Share
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்களில் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என்ற நம்பிக்கையில் தான் நாமும் செயற்பட்டோம்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் முழு உலகையும் உலுக்கியுள்ள நிலையில் எமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எம்மால் இப்போது எந்தவித தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தலை நடத்துவது குறித்து எந்த மாற்றுக் கருத்துக்களையும் கொள்ளவில்லை.
எனினும் தேர்தலை நடத்துவதா அல்லது நிலைமைகளை அவதானித்து தேர்தலை மேலும் சிலகாலம் பிற்போடுவதா என்பது குறித்து அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாது.
இது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி பதில் தெரிவித்துள்ளார்.
அதாவது, தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற தெளிவான பதில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் விரைவில் தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.
ஆனால் பாராளுமன்றத்தை கூட்டும் எந்த எண்ணப்பாடும் அரசாங்கத்திடம் இல்லை. இப்போதுள்ள பிரச்சினைகளில் பாராளுமன்றத்தை கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றார்.