Type to search

Headlines

சர்வாதிகார ஆட்சியை அனுமதிக்க முடியாது 20 ஆவதுதிருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு ஆபத்து

Share

20ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சி உருவாகும். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை நிறைவேற்ற விடமாட்டோம் என அரசுக்கு எதிராக மகா சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அமரபுர நிகாயா மகா சங்கம், ராமஞ்ஞா நிகாயா மகா சங்கம் மற்றும் இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை ஆகியனவே 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன.

பல பலவீனங்களைக் கொண்ட அரசியலமைப்பில் முன்மொழி யப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட வரைபை நிறைவேற்ற வேண்டாம் என்று அமராபுர நிகாயா மற்றும் ராமஞ்ஞா நிகாயா இணைந்த மகா சங்க சபையினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

நேற்றுக் காலை ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை தெளிவாகக் காட்டியது என்றும், முன் மொழியப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட வரைபில் ஜனாதிபதியைச் சுற்றி ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்க முற்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

எனவே, 20ஆவது திருத்த சட்ட வரைபை ஆதரிப்பது தலை துண்டிக்கப்படுவதற்கு ஒபபாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஊடக வியலாளர் கூட்டத்தில் பங்கேற்ற ராமஞ்ஞா நிகாயா நீதித்துறை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அட்டங்கனே ரத்தன பால தேரர், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது பிக்குகளின் பொறுப்பு என்று கூறினார்.

நாட்டில் ஆபத்தான தொற்று நோய் இருக்கும் நேரத்தில் இது போன்ற பலனற்ற அரசியலமைப்பு திருத்தத்தில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் 20 ஆவது அரசியல மைப்பு திருத்தம் மனிதனின் சிந்தனை சுதந்திரம் மற்றும் செயற்பாட்டிற்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது வளர்ச்சி அடையாத சமூகத்தை நோக்கி பயணிக்கும் சட்ட ஏற்பாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற வேண்டாம் என இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை அர சாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை என்பன சமநிலையில் பேணப்பட வேண்டும் என்பதே உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டின் எதிர்கால பயணத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்காக 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டின் நலன் மற்றும் மக்களின் இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link