கொரோனா பரிசோதனை விரிவாக்கப்பட்டால் இம்மாத இறுதியில் ஊரடங்கை தளர்த்தலாம்
Share
நாட்டில் தற்போது பின்பற்றப்படும் சமூக இடைவெளி தொடர்ந்தும் பேணப்படும் அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை விரிவாக்கப்பட்டால் இம்மாத இறுதியில் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போதுள்ளதைப் போன்றே எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண் ணிக்கை குறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனினும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எவ்வாறு அதனை பரப்பியுள்ளனர் என்பதன் அடிப்படையிலேயே இதனைத் தீர்மானிக்க முடியும்.
தற்போது இனங்காணப்படுபவர்கள் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு டையவர்களாவர். அவர்களுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை எமக்கு தெளிவாகக் கூற முடியும்.
இந்நிலையில் வைரஸ் சமூகத்துக்குள் பரவும் நிலைக்கு நாம் செல்லவில்லை.
தற்போது பரிசோதனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணி வரை (24 மணித் தியாலயங்களுக்குள்) 92 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பரிசோதனை முறைமையில் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னர் வைத்தியசாலைகளில் மாத்திரமே இந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப் பட்டன.
எனினும் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்படும் பிரதேசங்களிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காரணம் இவ்வாறான பகுதிகளிலேயே கணிசமான நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மாத்திரம் ஒரே நாளில் 208 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுவே ஒரு தளத்தில் அதிகளவு பரிசோதனை செய்யப்பட்ட முதல் தடவையாகும்.
இதேபோன்று கொழும்பில் 63 பேரும் அம்பாறையில் நால்வரும் கம்பஹாவில் 6 பேரும் யாழ்ப்பாணத்தில் 10 பேரும் இரத்தினபுரியில் 58 பேரும் பதுளையில் 83 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டுள்ளவர்களின் பெறுபேறு சாதக மான தாக அமைந்தால் அதனை எண்ணி மகிழ்ச்சியடைவோம். காரணம் இவர்கள் மூலமாகவே அடுத்தடுத்த நோயாளர்கள் இனங்காணப்படுவர்.
எனவே இவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லுமானால் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை பூச்சியமாகும்.
இந்த வைரஸ் துரிதமாகப் பரவக் கூடியது என்பதே பாதகமானதாகும். இதன் காரணமாகவே சமூக இடைவெளிளைக் கடைபிடிப்பது அத்தியாவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்காகவே தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதே நிலைமையை நாம் தொடர்ச்சியாக பின்பற்றினால் நாடுமுழுவதும் இம்மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக் கூடியதாக இருக்கும் என்றார்.
மேலும், வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.