ஏப்ரல் இறுதியில் நாடு முற்றாக விடுவிக்கப்பட்டு மே 23 இல் பொதுத் தேர்தல்?
Share
ஏப்ரல் மாதம் இறுதியில் நாடு முழுவதும் முற்றாக விடுவிக்கப்பட்டு எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினத்தில் தேர் தலை நடத்தினால், அரசியலமைப்பில் மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதை போல புதிய பாராளுமன்ற அமர்வை கூட்டலாமென அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டுமென பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தற்போதைக்கு தேர்தலை நடத்துவது பொருத்த மானதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் கருதுவதாக தெரிகிறது.
எனினும், அரச தரப்பினர் உடனடியாக தேர்தலை நடத்தி முடிப்பதில் விடாப்பிடியாக உள்ளனர். கொரோனாவினால் நாடு மூடப்பட்டுள்ள நிலையில், உடனடியாக தேர்தலை நடத்துவது சாத்தியமில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகிறது.
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானியில் புதிய பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்திலேயே கொரோனா தொற்று ஏற்பட்டது.
அப்பொழுதே நாட்டை லொக் டவுன் செய்யும்படி சில தரப்புக்கள் வலியுறுத்தி வந்தபோதும், வேட்புமனு காலம் முடியும் வரை லொக் டவுன் அறிவிக்கப்படவில்லை என அண்மையில் மனோ கணேசன் பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்த அபிப்பிராயம் வேறும் சில தரப்பிடம் உள்ளது.
வேட்புமனு காலத்தை பிற்போட்டு, உடனடியாக லொக் டவுன் அறிவிக்கப்பட்டிருந்தால், வேட்புமனு காலம் பின்தள்ளப்பட்டிருக்கும். இந்த அவகாசத்தில் ஐ.தே.கவின் பிளவு சீரடையலாம், அதற்கு அனுமதிக்க கூடாது என்பதே அரச தரப்பின் நோக்கமாக இருந்தது என அந்த தரப்புக்கள் கருதுகின்றன.
அதேபோல, பாராளுமன்றத்தை மீள கூட்ட விரும்பாமைக்கும் இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. பாராளுமன் றத்தை கலைக்கும் தனது வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஜனாதிபதி அறிவித்தால், தேர்தலிற்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்களும் தானாகவே வலுவிழக்கும். மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது,
புதிய வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த அவகாசம், ஐ.தே.கவின் பிளவை தீர்க் கும் அவகாசமாக அமைந்து விடக் கூடாது என்பது அரச தரப்பின் அவசரமாக கருதப்படுகிறது.
இதேவேளை, தேர்தலை பின்தள்ளுவதை அரசு விரும்பாததற்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளும் காரணமாக அமையலாமென கருதப்படு கிறது.
கொரோனா நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களின் பின்னர் ஒவ் வொருவருமே இந்த பொருளாதார நெருக் கடியை தனிப்பட்டரீதியிலும் எதிர்கொள்ளும் காலம் வரலாமென பல்வேறு அமைப்புக்கள் எச்சரித்து வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அது மக்களின் அதிருப்தியாக மாறும் காலத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்தி விட வேண்டுமென அரசு கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
மேற்படி காரணங்களினால், ஜூன் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட வசதியாக, மே 23ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, ஏப்ரல் இறுதிப் பகுதியிலிருந்து நாடு முற்றாக விடுவிக்கப்படவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள கொழும்பு, களுத்துறை, கண்டி, புத்தளம் மாவட் டங்களையும் மே ஆரம்பத்திற்குள் முழுமையாக கட்டுப்படுத்தி, அபாயமற்ற வலயமாக மாற்றலாமென கருதுகிறது.