யாழ் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு
Share
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்குச் சட்டத்தை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்குச் சட்டம் இலகுபடுத்தப்படும் விதம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினமே மீண்டும் இரவு 8 மணிக்கு மீள பிறப்பிக்கப்பட வுள்ளது.
இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை, அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.