மின்சாரக் கட்டணம் 18% அதிகரிப்பு
Share
2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (09) அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரண தொகை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த கட்டண உயர்வு சுமார் 5 சதவீத மின் நுகர்வோருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 95 சதவீத நுகர்வோருக்கு புதிய மின்சாரக் கட்டண உயர்வு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட இழப்புகள் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படமாட்டாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2026 இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை கட்டண உயர்வு முன்மொழியப்பட்டிருந்த நிலையில், தற்போது 18 சதவீதம் வரை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால்,
குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், 180 முதல் 210 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 1,760 ரூபாயும், 210 முதல் 240 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 2,210 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 270 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 2,600 ரூபாயும், 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 3,110 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படவுள்ளதோடு, நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், மின்சார சபையின் நிதிச் சமநிலையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், அதேவேளை தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டங்களை மின்சாரக் கட்டணத்தில் சேர்த்து பொதுமக்களிடம் வசூலிக்கப் போவதில்லை என ஆணைக்குழு உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


