உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 26 பேர் பலி
Share
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய மிகத்தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மே 5 அன்று நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் சபோரிஷியா , கிராமடோர்ஸ்க் , டினிப்ரோ மற்றும் போல்டாவாஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சபோரிஷியாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வாகனப் பழுதுபார்க்கும் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். போல்டாவாவில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையத்தைத் தாக்கியதில் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியாகினர். உக்ரைன் முன்மொழிந்த போர்நிறுத்தம் அமலுக்கு வருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா தரப்பில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளும், 154 ட்ரோன்களும் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைனும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


