Type to search

Editorial

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்துங்கள்

Share

அரசாங்கத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் செயற்படுகிறார்கள் என்ற சந்தேக மனப்பாங்குடன் நுணுகி நுணுகி ஆராய்வதே அரச புலனாய்வுத் துறையின் பணியாக உள்ளது.

அதாவது தமிழ் மக்களை எதிரிகளாகவும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல என்பது போலவுமே புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் அமைகின்றன.

உண்மையில் தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்க்காமல், சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்தும் புலனாய்வுத்துறை ஆய்ந்தறிந்து அதனை அரசிடம் முன்வைக்கு மாயின் – தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்பதன் மூலம் எங்கள் நாடு இலங்கை என்ற மனப்பாங்கை தமிழ் மக்களிடம் ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை புலனாய்வுத் துறை அரச உயர் மட்டத்திற்குத் தெரியப்படுத்தியிருக்குமாயின், சமாதானம் என்பது அதிக தூரத்தில் இருந்திருக்காது.

என்ன செய்வது தமிழ் மக்கள் ஒன்று கூடினால் – நினைவேந்தல் செய்தால் – நிகழ்வுகள் எதையேனும் முன்னெடுத்தால் அவ்விடத்தில் பிரசன்னமாகி, தமிழ் மக்கள் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் விரோதமாக நடந்து கொள்வது போன்ற அறிக்கைகளை தலைமைப் பீடங்களுக்கு அனுப்பி வைப்பதே அரச புலனாய்வாளர்களின் செய்கருமமாயிற்று.

உண்மை. தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியோ அன்றி தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருக்கக் கூடிய அரச நிர்வாகத்தின் செயற்றிறனின்மை பற்றியோ அரச புலனாய்வுத் துறையினர் அறிக்கை சமர்ப்பித்ததான வரலாறு இந்த நாட்டில் ஏதுமில்லை எனலாம்.

ஆம், வவுனியா மாவட்டத்தின் அரச அதிபராக இருந்த, பெரும்பான்மை இனம் சார்ந்த ஒருவர் அங்கு அரச காணிகளைச் சுவீகாரம் செய்ததான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் இதன் உண்மைத் தன்மை பற்றி அரச புலனாய்வுத் துறை ஆய்வு எதுவும் செய்ததாக இல்லை.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை அந்த மாவட்டத்தின் அரச அதிபராக தமிழர் ஒருவர் இருப்பதே பொருத்தமானது. அவ்வாறு இருப்பதன் மூலம் அந்த மாவட்டத்து மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறவும் அதற்குரிய தீர்வுகளை எட்டக் கூடியதாகவும் இருக்கும்.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் அரச அதிபராக தமிழர் ஒருவரை நியமிக்குமாறு அந்த மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கையை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள்; வவுனியா மாவட்டத்திற்கு தமிழர் ஒருவரை அரச அதிபராக நியமிக்குமாறு அரசைக் கேட்டுள்ளார்.

கூடவே, இதுபோன்ற மக்கள் சார்ந்த விடயங்களை எங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தி, நிலைமைகளை சீர்ப்படுத்த வேண்டு மெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link