சுட்டெரிக்கிறது வெயில் தாகசாந்திக்கு வழிசெய்மினே!
Share
பங்குனி மாதம் பகல் வழி போகின்றவர்களைப் பார்ப்பதே பாவம் என்றறொரு பழ மொழி நம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு.
இவ்வாறு கூறப்பட்டதற்குக் காரணம் பங்குனி மாதத்தில் அத்தனை வெயில் என்பதாகும்.
இதன் காரணமாகவே நம் தமிழர் பண்பாட்டில் திண்ணை முறைமை பின்பற்றப்பட்டது.
ஆம், வெயிலில் களைத்துப் போகின்றவர்கள் எந்த வீட்டின் திண்ணையிலும் இளைப்பாற முடியும்.
தவிர, திண்ணையில் ஒரு மண்பானையில் குடிநீரும் குவளையம் வைக்கப்படும்.
வெயிலில் களைப்புக் காரணமாக திண்ணையில் இருந்து களைப்பாறுபவர்கள் தண் ணீர் அருந்துவதற்காக நம் முன்னவர்கள் செய்த ஏற்பாடு அது.
ஆம், நம் மூத்தோர் கடைப்பிடித்த அந்த வாழ்வியல் பண்பாட்டை நினைக்கும்போது எத்துணை உயர்ந்த சிந்தனை என்று மனம் நெகிழந்து கொள்ளும்.
என்ன செய்வது எங்கள் அருமந்த பண் பாடுகள் கால சூழல் காரணமாக மறந்தும் மறைந்தும் போகலாயிற்று.
இப்போதெல்லாம் திண்ணை என்ற பேச்சுக்கே இடமில்லை.
பரவாயில்லை. இளைப்பாறுவதற்குத் திண்ணை இல்லாமல் போகலாம் – அதை நாம் கைவிடலாம்.
ஆனால் இயற்கை தன்னை இன்னமும் மாற்றவில்லை. மாற்றப்போவதுமில்லை. அப் படியாயின், பங்குனி மாதத்தில் பகலவன் சுட்டெரிப்பான்.
இதனாலேயே வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய நீரிழப்பைத் தவிர்க்க அடிக்கடி தண் ணீர் அருந்த வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூறிவருகின்றனர்.
இங்குதான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமாகச் சேர்ந்து தாகம் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
ஆம் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் இருக்கக்கூடிய சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் தேவையாம்.
சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படக்கூடிய நீரிழப்பு உடலியல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்ற அபாயத்தை பொதுமக்கள் உணர்ந்து கொண்டு; அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் குடிநீர் வசதிகளைக் கட்டாயமாக ஏற்பாடு செய்யவது அவசியம்.
இதேபோன்று நகரங்களுக்கு வருகின்ற மக்கள் தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக அத்தனை அமைப்புகளும் தமது நுழை வாயிலில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்வதுடன் அதனை எழுத்து மூலமாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி வெயிலால் ஏற்படக்கூடிய நீரிழப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.


