Type to search

Editorial

கௌதம புத்தபிரானின் பெயரால் துறவிகள் செய்யும் பஞ்சமா பாதகம்

Share

அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மனித மனங்களை எரித்துக் கருக்கவல்லன.

ஆம், ஓர் அப்பாவிச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று.

புத்தபிரானின் போதனைகளை இவ் வையகத்தின் கண் உபதேசம் செய்வதற்காக புனிதமான துறவு வாழ்வை மேற்கொண்ட பௌத்த துறவிகள், பாவகாரியம் செய்யும் மனித சமூகத்தை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மனித வாழ்வின் உன்னதத்தை உணர வைத்தல் வேண்டும்.

தவிர, அல்லல்படும் மக்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் துன்பங்களை நிவர்த்திக் கின்ற புண்ணிய காரியங்களை ஆற்றுவதும் துறவிகளின் தலையாய கடமையாகும்.

ஆனால் எங்கள் இலங்கைத் திருநாட்டில் பாவகாரியங்களில் ஈடுபட்டவர்களைக் கணக்கெடுத்தால் அதில் பௌத்த துறவிகள் இழைத்த கொடும்பாவ காரியங்களே அதிகம் எனலாம்.

இதை நாம் கூறுவதற்காக உண்மையாக – தெய்வீகத்தின் திருவருளை வேண்டி நிற்க வல்ல பௌத்த துறவிகளை நாம் தாழ்த்துவதாக யாரும் நினைத்து விடக்கூடாது.

மாறாக, தூய்மையான துறவற சபைக்குள் இருக்கக்கூடிய ஈனத்தனமான போலி வேடம் தரித்த பௌத்த துறவிகளையே நாம் இங்கு குறித்துரைக்கின்றோம்.

உண்மை,பௌத்த துறவிகளுக்கு இந்த நாடு வழங்கக்கூடிய அதீத முன்னுரிமை காரணமாக பௌத்த துறவிகள் தங்கள் துறவின் மகிமையை மறந்து தங்களுக்கு இருக்கக்கூடிய அரச அங்கீகாரத்தை – தேரர்கள் எனும் அந்தஸ்தைப் பயன்படுத்தி தவ றான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறான ஓர் ஈனச் செயலை அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம தேரர் செய்துள்ளதான தகவல் நீதி பரிபாலணத்தின் கதவைத் தட்டியுள்ளது.

ஆம், பிரஸ்தாப தேரர் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வந்ததை சிறுவர் சார்ந்த அரச அமைப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது.

இருந்தும் பல்லேகம தேரரின் அதீத செல்வாக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதிகள் அவரிடம் பெற்றுக் கொண்ட ஆசியும் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது.

இதற்கு மேலாக, அவரைக் கைது செய்வதற்கும் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் பொலிஸார் காட்டுகின்ற தயக்கம் – அவரைப் பிணை எடுப்பதற்கு முந்தியடித்து வரிசையில் இருக்கக்கூடிய சட்டத்தரணிகள் என்போரை நினைக்கும் போது புத்த பிக்குகள், சிறுவர், துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டாலும் போதை வஸ்துப் பாவனையில் இறங்கி தாண்டவம் ஆடினாலும் இனவாதம் பேசி இந்த நாட்டில் இன வன்மத்தைத் தூண்டினாலும் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுத்தலாகாதென்பதாக நிலைமை இருப்பது மிகப்பெரிய கொடுமை.

ஆம், பௌத்தத்தின் பெயரால் துறவிகள் செய்கின்ற ஈனத்தனங்களுக்கு குடை, கொடி, ஆலவட்டம் பிடிக்கின்ற அயோக்கியர்கள் இருக்கும்வரை இந்த நாடு உருப்படப்போவதில்லை என்பது புத்தரின் பெயரால் உறுதி செய்யப்படும் சத்தியமான உண்மை.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link