உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்
Share
உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கும் கொரோனாத்தொற்றில் இருந்து மக்களைப்பாதுகாப்பதில் நாடுகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன.
எனினும் தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டபோதிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.
கொரோனாத்தடை மருந்துகள் கண்டறியப்பட்ட போதிலும் அவை சாதாரண மக்களை வந்தடைவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.
தவிர, கொரோனாத்தடை மருந்தும் உத்தர வாதமானதா? என்றால் அதுவும் ஐயத்துக்குரியதே.
நிலைமை இதுவாக இருக்கையில், கொரோனாத்தொற்று வட பகுதியை ஆக்கிரமிக்கத்தலைப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் கொரோனாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலிருந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்பதை உணர முடியும்.
தவிர, கொரோனாத்தொற்றின் வேகத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை நம் சுகாதார அதிகாரிகள் அறிந்துள்ளனராயினும் அதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் அவர்களிடம் இல்லை.
இதனால் அவர்களின் அறிவுரைகள் பொருத்தப்பாடாக இல்லை என்பதையும் நாம் இங்கு கூறித்தானாக வேண்டும்.
ஆக, வடபகுதியில் வேகமெடுத்துள்ள கொரோனாத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வேறாக இருக்க, நம் சுகாதாரத்தரப்பின் நடவடிக்கைகள் பொருத்தப்பாடற்றதாக இருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக்கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியதால், இலங்கை அரசு கடுப்போடு இருக்கிறது. அரசாங்கத்தின் இந்த மனநிலையும் நமக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல
.
அதேவேளை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளை அழைத்து எங்கள் வடபகுதியில் வேகமாகப் பரவுகின்ற கொரோனாத்தொற்றைத் தடுப்பது எங்ஙனம் என ஆராய்வார்கள் என்றால், அதுவும் நடக்கப்போவதில்லை.
நிலைமை இவ்வாறாக இருக்கையில், பொதுமக்கள் விழிப்படைந்தால் மட்டுமே வடபகுதியில் கொரோனாத்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆம், கனடாவில் பொதுப் போக்குவரத்து வண்டிகளில் ஒரு வாசகம் எழுதியுள்ளார்கள். அதில் உங்கள் பெற்றோர்களைப்பாதுகாப்பதற்காக முகக்கவசம் அணியுங்கள் என எழுதப்பட்டுள்ளது.
இங்கு நாம் கூறுவதெல்லாம், கொரோனத்தொற்றில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக உரிய சுகாதார நடை முறைகளைப் பின்பற்றுங்கள். உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற மணிவாசகத்தை சிந்தியுங்கள்.