Type to search

Editorial

இதோ! கொரோனா நடனஅரங்கேற்றம் நட்டுவாங்கம் – தென்பகுதி பரத நாட்டியம் – வடபகுதி

Share

பரத நாட்டியம் எமக்கு மிக அறிமுகமான கலை.
ஆடவல்லானின் திருத்தாண்டவங்கள் பரதத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன.
இதனால் பரத நாட்டியக்கலையைத் தமது பிள்ளைகளுக்குக்கற்பிப்பதில் நம் பெற்றோர்கள் அதிக விருப்பு உடையவர்களாக இருப்பதைக் காண முடியும்.
இங்கு பரதநாட்டியத்தின் அத்தனை அசைவுகளுக்கும் அடிநாதமாக இருப்பது நட்டுவாங்கம்.
தாம்… தீம்… தோம்… என்ற உச்சாடனம் பரத நாட்டியக்கலையை அதி உச்சத்துக்கு எடுத்துச் செல்லும்.
அதனால் நட்டுவாங்கக் கலைஞர் உணர்வு பூர்வமான கலைத்துவத்துடனும் அரங்கை உசார் நிலையில் வைத்திருக்கக்கூடிய மன எழுச்சியுடனும் இருக்க வேண்டும்.
தவிர, அரங்கில் மறைந்திருந்து நாட்டிய கலையை இயக்குகின்ற சக்தியாகவும் நட்டு வாங்கமே இருக்கிறது.


இஃது ஒரு சிறிய அறிமுகத்துக்கானது.
இவை ஒருபுறமிருக்க, வட பகுதியில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத்தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
அதிலும் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதெனும்போது, நிலைமை படுமோசமாக மாறிவருகிறது என்பதை ஊகிக்க முடியும்.
இருந்தும் வடபகுதியில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் – பொருத்தமான நடவடிக் கைகளை எடுப்பதில் வட மாகாண அரச நிர்வாகம் மிகப்பின்னடைவில் உள்ளதென்பதைக் கூறித்தானாக வேண்டும்.
இதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழவே செய்யும்.

இங்குதான் வடபகுதி அரச நிர்வாகத்தைப்பரநாட்டியம் என எடுத்துக் கொண்டால், அதனை இயக்குகின்ற நட்டுவாங்கம் தென்பகுதியிலுள்ள மத்திய அரச நிர்வாகம் எனக் கூறிக் கொள்ளலாம்.
ஆக, தென்பகுதி நட்டுவாங்கம் தாம்… தீம்… தோம்… என்றால் மட்டுமே வடபகுதி பரதம் (நிர்வாகம்) ஆடல் புரிய முடியும்.
ஆம், யாழ்ப்பாணத்தில் எங்கும் கொரோனா பொசிற்றிவ் என்றிருக்கையில்,
அதனைக் கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாமல் திண்டாடுகின்ற வடக்கு மாகாண நிர்வாகம்; ஆடை அலங்காரங்கள் அணிந்தவாறு அரங்கில் நின்று அங்குமிங்கும் நடக்கிறது.


தாம்… தீம்… தோம்… என்ற தென்பகுதி நட்டுவாங்கத்தின் கட்டளைகளைப்பார்த்திருக்கிறது.
அந்தோ! வடபகுதி மக்கள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி அல்லல்படப் போகின்றனர். யார் என்ன செய்ய முடியும்.
பாட்டும் நானே! பாவமும் நானே! என்று துணிந்து களமிறங்க வல்லார் வடபகுதியில் யாருளரோ யாம் அறியோம் பராபரமே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link