Type to search

Editorial

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஓர் அவசர மடல்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.


தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று.


பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது.


அவரவர் தத்தம்பாடு. நிர்வாகப் பணிகள் எப்படியாக இருக்கிறது என்பதை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கவனிப்பது போலத் தெரியவில்லை. இருந்தும் ஓரளவு திருப்தியாகச் சேவையாற்றிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனாத் தொற்றுக்குப் பின் கந்தறுந்து காவடி எடுப்பது போலத் தெரிகிறது.


தேவையில்லாத விடயங்களில் தலைப்பட்டு தேவையுள்ள வேலைகளையும் செய்ய முடியாத நிலைக்கு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் வந்துவிட்டது.

இதற்கு நல்ல உதாரணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையமாகும்.


ஆளுந்தரப்பிடம் நல்ல பெயர் வாங்க வெளிக்கிட்டு இன்று கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் சீ… என்று போகிறது.


உண்மையில் வடக்கு மாகாண சுகா தாரத் திணைக்களம் பார்க்க வேண்டிய வேலையை யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் பார்க்க முற்பட்டதால் வந்த வினை இது.


இதுதவிர, இப்போது கொரோனாப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னைய வெளிநோயாளர் பகுதிக்கு முன்பாக நடைபெறுகிறது.


எந்தவித ஒழுங்கு கட்டுப்பாடுகளும் அங்கு இல்லை. அதிலும் மிகப்பெரும் நாசகாரம் பிசிஆர் பரிசோதனைக்கு வருகின்ற வெளியாட்களையும் யாழ்.போதனா வைத்திய சாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களையும் ஒன்றாகச் சேர்த்து பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகும்.


இதில் இன்னும் மோசம் அத்தனை பேருக்கும் முன்பாக பெயர் கூவி அழைத்து; உங்களுக்கு கொரோனா பொசிற்றிவ் என்று அறிவிப்பதாகும்.


அடிப்படை மனிதாபிமானம் இல்லாத அளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கின்ற இந்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க எவரும் இல்லை என்பதுதான் மிகப் பெரும் துன்பம்.


உண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதாக இருந்தால், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் வைத்து அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட விசேட அறைகளில் வைத்து பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


இதைவிடுத்து, வெளியாருடன் யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கியிருக்கின்ற நோயாளர்களையும் சேர்த்து நீண்ட நேரம் அவர்களை நிற்க வைத்து பிசிஆர் பரிசோதனை செய்வது அந்த நோயாளர்கள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும்.

எனினும் இதுவிடயங்களில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் அசமந்தமாக இருக்கிறது என்பதுதான் இங்கு வேதனைக்குரியது.


எதுஎவ்வாறாயினும் கொரோனாத் தொற்றுப் பரவினால் பரவட்டும் என்பது போல எவர் நடந்து கொண்டாலும் அது மிகப் பெரும் பாவச் செயல் என்பதுதான் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link