சிவாச்சாரியப் பெருமக்களுக்கு ஓர் அவசர கடிதம்
Share
வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்.
உங்களுக்கான, இக்கடிதம் அவசரமாக எழுதப்படுகிறது.
நேற்று முன்தினம் 09ஆம் திகதி காலை 9.48 மணி. யாழ்.பண்ணைச் சுற்றுவட்டத்தில் கடமையில் நின்ற போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை இடைமறித்து அவர்களின் வாகன அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் மோட்டார் சைக்கிளில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் வந்து கொண்டிருந்தார். போக்குவரத்துப் பொலிஸார் அவரை இடைமறிக்கவில்லை.
அதேசமயம் பட்டாடை அங்க வஸ்திரம், சிவசின்னமாகிய விபூதி அனுட்டானக் கோலம், பார்க்கும்போது பட்டெனத் தெரிகிறது அவர் சைவ சமய சிவாச்சாரியர் என்று.
இருந்தும் பொலிஸார் அவரை இடைமறித்து மோட்டார் சைக்கிளின் அத்தனை ஆவணங்களையும் சோதனையிட்ட பின்னர் அனுப்பி வைத்தனர்.
சாதாரண பயணிகள் போல சைவ சமய சிவாச்சாரியரை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தியது ஏன் என்பதுதான் எமக்குப் புரியவில்லை.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
என்றார் வள்ளுவர்.
வள்ளுவரால் மிக உயர்ந்த அறத்தின் சிரேஷ்டர்களாக அடையாளப்படுத்தப்படும் அந்தணப் பெருமக்கள் – சிவாச்சாரியப் பெரு மக்களுக்கு நம் மண்ணில் இருக்கக்கூடிய மரியாதை எத்தகையது என்பது சிந்திக்கப்பட வேண்டும்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் என்று வள்ளுவன் வகுத்த வகையில், எல்லா உயிர்களும் தொழக்கூடிய தகைமை சிவாச்சாரியப் பெருமக்களாகிய உங்களிடம் இருந்தபோதும் உங்களுக்கான கெளர வத்தை சம்பந்தப்பட்டவர்கள் தருவதில்லை எனில், அதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான் இவ் அவசரக் கடிதத்தின் நோக்கமாகும்.
அன்புக்குரிய சிவாச்சாரியப் பெருமக்களே! ஊரடங்கு வேளையிலும் சமய வழிபாட்டுக்காக பெளத்த, கத்தோலிக்க மதகுருமார்கள் வீதியில் பயணிக்க முடிகிறது.
ஆனால் முப்பொழுதும் நித்திய பூசை செய்ய வேண்டிய உங்களால் ஊரடங்கு பகல் வேளையில் பயணிக்க முடியவில்லை என்றால், இவை அத்தனைக்கும் காரணம் யார் என்றால், நீங்களே அன்றி வேறில்லை.
சிவப்பெருந்தகையீர்! உங்கள் தவறை நீங்களே திருத்த வேண்டும். அழைத்த விழாவுக்கெல்லாம் சென்று வேதம் ஓதி ஆசி வழங்காதிருப்பின், பிற மத நிகழ்வுகளில் ஓடிச் சென்று பங்குபற்றாது பகிஷ்கரித்து அறிக்கை விடுவீர்களாயின்,
அரசியல் தலைவர்கள் ஆலயம் வந்தால் – பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கும்பிட வந்தால், பஞ்சாலாத்தி காட்டி காளாஞ்சி கொடுப்பதை விடுத்து,
இந்த நாட்டில் எங்களுக்கு இருக்கக் கூடிய கெளரவம் என்ன? என்று துணிந்து கேட்டால்,
மாட்டைத் தின்னாததும் புலால் உண்ணாததும் உயிர்க்குறுகண் செய்யாததும் நாங்கள் செய்த தவறா? என்று உரக்கச் சொன்னால், நிச்சயம் அவர்கள் உங்கள் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அதன்பின் உங்களுக்கான மரியாதை இமயத்தைத் தொடும். இது சத்தியம்.