Type to search

Editorial

எங்கள் இதயங்களில் குடியிருக்கும் எமதருமை உறவுகளே!

Share

இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும் போரில் எம் தமிழ் உறவுகள் துடிதுடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறி இன்று 12 ஆண்டுகள் நிறைவாயிற்று.

எனினும் எங்கள் உறவுகளின் நினைவுகள் காலம் கடந்து போகாமல் அப்படியே இருக்கின்றன.
ஓ! தமிழின அழிப்பாக நடந்த அந்தக் கொடுமை ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாதது.


எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கையேந்தி நின்ற தமிழ் மக்களை உதறித் தள்ளி விட்டு, உலகத் தொண்டு நிறுவனங்கள் திரும்பிப் பாராமல் ஓடிச் சென்றதை எம் நெஞ்சம் எப்படி மறக்கும்.


அந்தோ! நாடாளும் அரசு தன் நாட்டு மக்களை இனத்தின் பேரால் ஈனச் செயல் செய்து கொடும்பழிக்கு ஆளானது.


சிறுவர், முதியவர்கள், பெண்கள் என்று பாராமல் குடும்பம் குடும்பமாக முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எங்கள் உறவுகளை எம் இதயத்தில் இருத்தி வழிபடுகின்ற இந்த வேளையில், எம் இனத்துக்காக உங் கள் உயிரைக் கொடுத்த தமிழ் உறவுகளே!


உங்களுக்கு வஞ்சம் செய்த இந்தப் பார் இன்றுபடும் பாட்டை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
அதோ! கொரோனாக் கிருமியோடு யுத்தம் நடத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவிக்கின்றன.


போராயுதம் இருந்தால் போதும் மனிதத்தைக் கொன்று மனிதனை வாழ வைக்க முடியும் என்று நினைத்த நாடுகள் இன்று எதுவும் செய்ய முடியாமல் அந்தரிக்கின்றன.


இந்த அவலம் இலங்கைக்கும் ஏன்? எங்களுக்கும் உரியதாயினும் நீங்கள் ஆற்றாது அழுத கண்ணீருக்கு உரியவர்கள் பதிலளிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதையே உலகில் நடக்கின்ற விசித்திரங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.


ஆம், அன்புக்குரிய எம் உறவுகளே!
உங்களை வஞ்சித்தவர்கள் என்றோ ஒருநாள் தண்டனை பெற்றே ஆவர்.


இப்போது இருக்கின்ற ஆட்சி வலிமையும் அதிகார பலமும் ஊதாரித்தன நாடுகளின் ஆதரவும் ஜெயித்தது போல், வெற்றியை அனுபவிப்பதுபோல் பிரமை கொடுக்கும்.


ஆனால் நிச்சயம் உங்கள் அழுகண்ணீர் மிகப் பெரும் படைக்கலமாய்த் திரண்டு உரியவர்களைச் சங்கரிக்கும். இது அறத்தின் பேரால் கூறப்படும் சத்திய வாக்கு.


உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்களின் ஆத்ம பலம் எங்கள் தமிழினத்தை நிச்சயம் காப்பாற்றும்.


எங்கள் இதயங்களில் நீங்கள் சங்கமமாய் என்றும் வீற்றிருப்பீர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link