வீட்டுப் படலையை தட்டுகிறது கொரோனா!
Share
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனை மறந்ததனாலோ அன்றி அறம் பிழைத்ததனாலோ என்னவோ கொரோனாத் தொற்று பார்க்குமிடமெங்கும் பரவிக் கிடக்கிறது.
நீக்கமற நிறைந்திருக்க வேண்டியதை உதறிவிட்டால், தீங்கிழைக்கக்கூடிய தீயவையே எங்கும் குடியிருக்கும். இதுவே உண்மைத் தத்துவம்.
இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா என்பதே செய்தி. அதிலும் கொரோனாத் தொற்று உறுதி என்ற தகவல் அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
இதே நிலைமையில் நாடு செல்லுமாயின் கொரோனா உறுதி என்பது ஆயிரக்கணக்கைக் கடக்கும் அபாயம் உள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு உயரிய மதிப்பு இருந்தது. ஆனால் இப்போதிருக்கக்கூடிய சூழ்நிலையில் கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என்று கூறுமளவுக்கு அரச தரப்பு வந்துவிட்டதென்றே கூறலாம்.
கொரோனாவின் முதலாவது வீச்சு, தேர்தல் காலத்தில் வந்த வகையால் தேர்தலை மையப்படுத்தி கொரோனாக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் வேகப்படுத்தப்பட்டன.
நோக்கம் வேறாக இருந்தாலும் அதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இருந்தும் தற்போது கொரோனா வீச்சைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சலிப்புத்தன்மை காணப் படுவது போன்ற நிலைமையை அவதானிக்க முடிகிறது.
உண்மையில் கொரோனாவைக் கட்டுப் படுத்துகின்ற விடயத்தில் அரச தரப்பு காட்டு கின்ற தீவிரமே ஏனைய அமைப்புக்களை உசார்படுத்தும்.
மாறாக, அரச தரப்பு தளர்வு நிலை கண்டால் அந்தத் தளர்வு நாடு முழுமைக்கும் பாத கத்தை ஏற்படுத்தும்.
எனவே கொரோனாவுடன் வாழப்பழகுதல் என்ற முடிவை இலங்கை அரசாங்கம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எடுக்கக்கூடாது.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அத்தகையதொரு முடிவை எடுப்பதற்கு அந்த நாட்டு மக்களின் கலை, கலாசாரம் மற்றும் பழக்கவழக்கப் பின்னணிகளும் காரணமாக இருக்கின்றன.
ஆனால், இலங்கை போன்ற இல்லறவியல் பண்பாட்டு உயர்வுமிக்க நாடுகள் அவ் வாறான முடிவுகளை எடுப்பது குடும்பக் கட்டுமானங்களிலும் தனிமனித வாழ்வியலிலும் மிகப்பெரும் துன்பியலை ஏற்படுத்திவிடும்.
ஆகையால் கொரோனாவுடன் வாழப் பழகுதல் என்பதை விடுத்து, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்துதல் என்ற இலக்குடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம் ஒவ்வொருவரின் வீட்டுப் படலையையும் தட்டுகின்ற கொரோனாவை எட்டத் துரத்துவதற்கு நாம் அனைவரும் தயாராகுவது காலத்தின் கட்டாயம்.