வாக்களிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடுகிறதா?
Share
பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்து வரும் ஐந்து வருடங்கள் வெள்ளி திசை.
வாக்களித்து அவர்களுக்கு வெள்ளி திசை கொடுத்த மக்களுக்கு என்ன திசை என்று எவரும் கணித்துப் பார்ப்பதில்லை.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளி திசை என்றால், வெள்ளி திசை தருகின்ற யோகங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும்.
அதுவே உண்மையான வெள்ளி திசையாகும்.
இதைவிடுத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வெள்ளி திசை. மக்களுக்கு சனி திசை என்றால் அது யாருடைய தவறு என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
அண்மையில் நடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, வேட்பாளர்கள் செலவிட்ட தொகையை ஒரு கணம் நினைத் துப் பாருங்கள்.
பணச் செலவு மட்டுமல்ல. தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பு சொல்லி மாளா.
இவ்வாறாக பணமும் மனித உழைப்பும் பெருமளவில் செலவிடப்பட்டு தேர்தல் எதிர் கொள்ளப்பட்டது என்பதற்குள், ஜனநாயகப் பற்றோ அல்லது மக்களுக்கு சேவை வழங்கு வது என்ற மனநிலையோ இருக்கிறதா? என் றெல்லாம் நாம் பார்த்தாக வேண்டும்.
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களை இனி மக்கள் சந்திப்பதென்பதே கடினமான காரியமாக இருக்கும்.
தேர்தல் காலத்துக்குப் பின்னர் அவர்கள் மக்களைத் தேடி வரப் போவதில்லை. இதுவே யதார்த்தம். இந்த யதார்த்தத்துக்கு நாங்கள் புறம்பானவர்கள் என்று யாரேனும் மார்தட்டு வார்களாயின் நல்லது. களத்தில் நின்று மக்கள் பணி செய்து காட்டுங்கள்.
நீங்கள் செய்கின்ற பணி ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் திசை திருப்பும்.
தவிர, பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பதாக நிலைமை இருந்தால் காவேரிதான் சிங்காரி. சிங்காரிதான் காவேரி என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை எனலாம்.
எதுவாயினும் தாம் வாக்களித்து பாராளு மன்றத்துக்கு அனுப்பி வைத்த பிரதிநிதிகள் எவ்வாறாகச் செயலாற்றுகிறார்கள் என் பதைக் கண்காணிக்கின்ற கடமையை பொது மக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் செய்தாக வேண்டும்.
அதேவேளை மக்கள் பிரதிநிதிகள் நல்லது செய்யும்போது அதனைப் பாராட்டவும் தவறி ழைக்கும்போது சுட்டிக் காட்டவும் பொதுமக்கள் தயாராக இருந்தால், பாராளுமன்ற உறுப் பினர்கள் நிச்சயம் மக்கள் பணி செய்வதில் இருந்து தங்களை விலக்கி வைக்க முடியா மல் போகும்.