வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட 9ஆவது பாராளுமன்ற அமர்வு
Share
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றம் இன்று கூடுகின்றது.
கொரோனாத் தொற்று அபாயம் இருக்கக் கூடிய வேளையில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டு பாராளுமன்றம் கூடுவது என்ற விடயம் ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
இதை நாம் கூறும்போது, இஃது மட்டும் தான் வரலாற்றுப் பதிவா? என்றால் இல்லை.
இந்த நாட்டின் சுதந்திர காலத்தில் ஆட்சிப் பீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி முற்று முழு தாகத் தோல்வியடைந்து கிடைத்த ஒரேயயாரு நியமன உறுப்பினரையும் இதுவரை நியமிக்க முடியாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இல்லாத பாராளுமன்றம் இன்று கூடுவது பதிவிற்குரியதாகும்.
இதற்கு மேலாக, நம் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்றம் போக முடியாத நிலைமையும் எங்களைப் பொறுத்தவரை பதிவிற்குரியது.
இவையாவற்றுக்கும் மேலாக, வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்து இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பு என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதற் தடவையாக பாராளுமன்றம் செல்வதும் நாம் குறித்துரைக்கக்கூடிய பதிவே.
இதில், இந்த நாட்டின் உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்கின்ற ஒரு புதிய பரி மாணத்தை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்றப் பிரவேசம் பதிவேற்றம் செய்துள்ளது.
இவைமட்டுமே ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத் தொடரின் வரலாற்றுப் பதிவுகள் என்றால்,
இவற்றையும் கடந்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பிள்ளைகள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என்ற பதவி நிலைகளில் இருப்பதும் இவ்வாறானதொரு அரசியல் சூழமைவு எதிர்காலத்தில் ஏற்படுவது சாத்தியமற்றது எனக் கூறக்கூடிய அளவில், 9ஆவது பாராளுமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்று கூடுகின்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப் பினர்கள் ஒன்றாக ஒற்றுமைப்பட்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே நாம் இங்கு முன்வைக்க முடியும்.
எதுவாயினும் இலங்கைப் பாராளுமன்றத்தில் வயது கூடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை 87 வயதான கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்குரியதாகிறது என்பதை தமிழ் மக்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.