பேரனர்த்தங்கள் கற்பிக்கின்ற பாடங்கள்
Share
கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக் காட்டு இதிகாசம் என்ற நூலைப் பலரும் படித்திருப்பீர்கள்.
கவிஞர் வைரமுத்து பிறந்த மண் கள்ளிக்காடு.
ஒரு தடவை அங்கு ஏற்பட்ட பெரு வெள்ள அனர்த்தம் கள்ளிக்காடு என்ற அந்தப் சிறு கிராமத்தைக் கபளீகரம் செய்துவிட,
கள்ளிக்காட்டு நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் இடம்விட்டுப் புலம்பெயர்ந்தனர்.
அவ்வாறு புலம்பெயர்ந்த வைரமுத்துவே இப்போது கவிப் பேரரசு என்று போற்றப்படு கிறார்.
இங்கு கள்ளிக்காடு என்ற சிற்றூரின் வாழ்வியல் முறைமைகளை அவர் தொகுத்து எழுதிய நூலே கள்ளிக்காட்டு இதிகாசமாகும்.
கள்ளிக்காடு எனும் கிராமத்து வாழ்வியலை அவர் வர்ணித்து எழுதி இருந்தாலும் கள்ளிக்காடு வெள்ளப் பேரனர்த்தத்தை சந்திக்காமல் இருந்திருந்தால், கள்ளிக்காட்டுக்கும் இதிகாசம் இல்லை. வைரமுத்து என்ற கவிப் பேரரசும் தமிழ் உலகுக்கு இல்லை என்பதாக நிலைமை இருந்திருக்கும்.
ஆக, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற அனர்த்தங்கள் பேரவ லங்களைச் சந்தித்திருந்தாலும் அதற்குள்ளும் மனித வாழ்வியலுக்கு உகந்த மிகப் பெரும் படிப்பினைகள், வாய்ப்புக்கள், வளங்கள் கிடைத்து விடுகின்றன.
இந்த வகையில், இப்போது உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்று மனித உயிர்களைக் கண்டபாட்டில் காவு கொள்கின்றது.
இந்த மனிதப் பேரவலத்தில் இருந்து இலங்கை போன்ற நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் தப்பித்துள்ளனவாயினும் நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற் காக வீடுகளில் இருக்கின்ற ஒரு கட்டாய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் தவிர்ந்த வேறு எந்த வகையிலும் இப்படியாக வீடுகளில் இருக்கின்ற கட்டாயம் ஏற்பட முடியாது என்றளவில்; இந்த சூழமைவானது முன்பும் இருந்திருக்கவில்லை. எங்கள் வாழ்நாளில் இனியும் இருக்கப் போவ தில்லை என்று கூறிக் கொள்ளலாம்.
அதேநேரம் கொரோனாத் தொற்றை முன்வைத்து கட்டாயத்தின் பேரில் வீடுகளில் இருக் கின்ற வேளையில் பாடசாலைகள் இல்லை, மாணவர்களும் பெற்றோர்களும் ஆற்றலை யும் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை.
லீவு விண்ணப்பம் நிரப்பி உயர் அதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் மத்தியில் மன உளைச்சலோடு எடுக்கின்ற லீவு போல் அல்லாது வீட்டில் இருங்கள். உங்கள் சம்பளம் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்போடு அனுபவிக்கின்ற விடுமுறைகள். இவற்றின் மத்தியில்; பதட்டம் இல்லை, பதகழிப்பு இல்லை.
இதனால் அன்றாடம் காலையில் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கும் தலையிடி இல்லை.
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு எதுவுமில்லை. மீற்றர் வட்டி, சீட்டுக் கூறல், வங்கிக்கடன், கூட்டு வட்டி என மனித இதயத்தைத் துளைக்கும் ஈட்டிகள் எதுவுமில்லை.
இவை மனிதருக்கென்றால் வான்வெளியில், வளிமண்டலத்தில், கடல் நீரில், பெரு வெளியில் அசுத்தக் கலப்பு ஏதுமில்லை.
வாகன விபத்துக்கள், தற்கொலை மரணங்கள் ஏதுமில்லை என்று கூறுமளவுக்கு வாழ்வு இப்படியும் அமையலாம். நம் முன்னோர்களின் பெறுமதியான மனித வாழ்வு இப்படித்தான் இருந்தது என்பதை கொரோனா என்ற பேரனர்த் தம் நமக்குக் கற்பித்து நிற்கிறது.
இனி இயற்கையோடு ஒன்றித்து வாழுதல் பற்றிச் சிந்திப்போம்.