சண்டமாருதம் தள்ளிவிழுத்திய வாழைச் செய்கையாளர்கள்
Share
வட பகுதியில் கடந்த 20, 21ஆம் திகதிகளில் வீசிய கடும் காற்றினால், ஏகப்பட்ட சேதங்கள் நடந்தாகியுள்ளன.
வீசி எறியப்பட்ட வீட்டுக் கூரைகள், முறிந்து விழுந்த மரங்கள், கொட்டி விழுந்த மாங் கனிகள் காய்கள், சரிந்து முறிந்த முருங்கைகள் என்றவாறு சேதங்கள் பலவாகின.
அதிலும் வாழைச் செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட சேதம் சொல்லிமாளா.
ஆம், கடந்த இரண்டு நாட்களாய் வீசிய கடும் காற்றினால், ஒட்டுமொத்த வாழைகளும் முறிந்து வீழ்ந்து கிடக்கின்ற காட்சியைப் பார்க்கும் போது கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.
அந்தளவுக்கு வாழைச் செய்கையாளர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது.
கொரோனாத் தொற்றுக் காரணமாக வாழைக்குலைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் போக; ஒரு கிலோ வாழைப்பழம் 40 ரூபாய் என்ற எல்லைக்குள் நின்றுவிட்டது.
இஃது வாழைச்செய்கையாளர்களுக்கு நட்டத்தையே கொடுத்திருக்கும்.
பரவாயில்லை ஊரோடும் நாட்டோடும் ஒத்த பிரச்சினை என்பதால் வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி பற்றி வாழைச் செய்கையாளர்கள் அதிகம் விசனம் அடையவில்லை.
நிலைமை இதுவாக இருக்கையில், கடந்த 20, 21ஆம் திகதிகளில் வட பகுதியில் வீசிய கடும் காற்றினால் குலை போட்ட வாழைகள் அத்தனையும் முறிந்து போயின.
48 மணி நேரத்துக்குள் நடந்து முடிந்த இயற்கையின் சீற்றத்தால் வாழைச் செய்கை யாளர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளும் தகர்ந்து போயிற்று.
என்ன செய்வது நாங்கள் தமிழர்கள். எனவே எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவார ணம் ஏதும் கிடைக்கமாட்டாது.
இது காலாகால மாக இந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறை. அண்மையில் வெசாக் பண்டிகை கொண்டாட முடியாமல் போனதன் காரணமாக, வெசாக் கூடுகள் மற்றும் அலங்கார வளைவுகளை நிர்மாணிப்பவர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் இவர்கள் அடைந்த பாதிப்பை ஈடுசெய்வதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச தரப்பால் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், வடபகுதியில் வீசிய கடும் காற்றினால் ஒட்டுமொத்த வாழைகளும் முறிந்து நிலத்திடை கிடக்கின்ற போதிலும் இந்த இழப்புப் பற்றி அரச தரப்பு அறியுமா என்பது சந்தேகம்தான்.
எது எவ்வாறாயினும் வடபகுதி வாழைச் செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க வட பகுதி அரச நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.