ஒவ்வொரு தடவையும் சீதையை தீயிடை ஏற்றாதீர்கள்
Share
அன்புக்குரிய தமிழ் மக்களே! எங்கள் தமிழ் அரசியல் படும் பாட்டை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
இல்லாதது பொல்லாதது என அடிப்படை மனச்சாட்சியின்றி தேர்தல் பிரசாரங்கள் நடந்தா கின்றன.
இவைபற்றி நீங்கள் அறியாதவர்கள் அல்ல. எனினும் ஓர் உண்மையை இங்கு நாம் கூறி யாக வேண்டும்.
1330 குறட்பாக்களைத் தந்த வள்ளுவன் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றான்.
மெய்ப்பொருள் காண்பதில் இருந்து நாம் விடுபடுவோமாயின் எவர் எதைக் கூறினாலும் அஃது சரியோ என்ற ஐயுறவுக்கு நாம் ஆளாக வேண்டி வரும்.
அதேசமயம் மெய்ப்பொருள் அறிந்தபின் அதில் ஐயம் கொள்ளலாகாது என்பதையும் மக்கள் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என நினைத்த வள்ளுவன்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
என நவில்கின்றார்.
குறளின் பொருள்; ஒருவரை நாம் ஆய்ந் தறிந்து தெளிந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஏற்றுக் கொண்ட பின்னர், அவர் மீது ஐயுறவு கொள்ளலாகாது. அவ்வாறு ஐயு றவு கொண்டால் அஃது தீராத துன்பத்தைத் தரும்.
எனவே நாம் ஒருவரை நேர்மையானவர், நீதியானவர், அவர் நம் தமிழ் இனத்துக்குப் பாதகம் செய்யமாட்டார் என்று தீர்மானித்து விட் டால் – தெளிந்துவிட்டால் பின்னர் அவர் குறித்து யார் எதை எவ்வாறு எங்கு கூறினாலும் அது பற்றி அலட்டிக் கொள்ளலாகாது.
இதையே வள்ளுவன் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளான்.
இதை நாம் இன்னும் விரிவுபடுத்தலாம். அசோகவனத்தில் இருந்த சீதையை இராமர் மீட்டு வருகிறார். எனினும் சீதை மீது அவர் பரிவு காட்டவில்லை. அதற்கான காரணத் தைக் கம்பனாலும் தெளிவுபடுத்த முடியாமல் போயிற்று.
சில விடயங்கள் உளம் சார்ந்தவை. எனவே மனத்திடை மாசு ஏறிவிட்டால், அந்த மாசை அகற்றுவது கடினம்.
இஃது இராமருக்கும் பொருந்தும் என்ப தைக் காட்டவே அப்படியயாரு ஏற்பாடு.
இராமர் தன் மனத்திடை எழுந்த ஐயத்தைப் போக்க, சீதையை தீயில் ஏற்றுகிறார். தீயில் இறங்கி தன் கற்பின் தூய்மையை பிராட்டியார் நிருபிக்கின்றார். இதனோடு இராமரின் மனம் தெளிய வேண்டும்.
இதைவிடுத்து நாளுக்கு நாள்; கிழமைக்குக்கிழமை; மாதத்துக்கு மாதம் சீதை தன் கற் பின் திறத்தை தீயிடை ஏறி நிரூபிக்க வேண்டும் என இராமர் நினைத்தால், அந்த வாழ்வு உருப்படுமா என்ன?
ஆக அன்புக்குரிய தமிழ் உறவுகளே! எம் தமிழினம் தழைக்க பொருத்தமான தலைமை யார் என்று தீர்மானியுங்கள்.
உங்கள் தீர்மானத்தை எடுப்பதற்கு நீதி, நேர்மை, இதய சுத்தி, இறை பக்தி என்ற பண்பு விருத்திச் சுட்டெண்களைப் பயன்படுத்துங்கள். இப்போது உங்கள் இதயம் முடிவு சொல் லும்.
அந்த முடிவை உறுதியாக எடுங்கள். எவர் எது சொன்னாலும் தளராதீர்கள்.