Type to search

Editorial

அடுப்பு ஏறாத உலை இல்லை எனும் வகை செய்வோம்

Share

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பெயரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டுச் சூரையங்காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தாரே
என்று கூறிய பட்டினத்தடிகள்.

ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல என்று பட்டியல்படுத்தி, இந்தத் தேசத்திலே யாரும் சதமல்ல நின்றாய் சதம் கச்சியேகம்பனே என்று நிறைவு செய்தார்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு என்று கூறிய பட்டினத்தடிகள் எதற்காக ஊரும் சத மல்ல உற்றார் சதமல்ல என்று கூறினார்.

ஒருவர் இறந்தபோது ஊர் கூடி அஞ்சலி செலுத்துவது பெறுமதியானதல்லவா?
அப்படியானால் பட்டினத்தடிகள் முன்னுக்குப்பின் முரணான தத்துவத்தை உபதேசிக்க முற்பட்டாரா என்று எண்ணியதுண்டு.

ஆனால் இப்போதுதான் தெரிகிறது கொரோனா நோயினால் உயிரிழந்து விட்டால்; ஊர் இல்லை, உறவுகள் இல்லை, பெற்ற பிள்ளைகளும் இல்லை, ஏன்? இறந்தவரின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாதவாறு மூடிய பெட்டியில் வைத்து மற்றவர் அறியா வண்ணம் அடக்கம் நடந்து விடுகிறது.

இங்குதான் பட்டினத்தடிகள் உபதேசித்த யாரும் சதமல்ல என்ற தத்துவம் உணரப்படுகிறது.

ஓ! இறைவா! மானிடர்களின் வாழ்வியல் முறையில் உனக்கு உடன்பாடு இல்லை என் பதை உணரமுடிகிறது.

இருந்தும் மனிதர்கள் மீது இன்னமும் நீ அன்பாய் இருக்கிறாய் என்பதையும் நாம் மறந்து விடவில்லை.

மானிடர்கள் மீது நீ வெறுப்புக் கொண்டதற்கு காரணம் கனக்க உண்டு.

ஆனால் அவர்கள் மீது நீ இன்னமும் அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம்?
இதைத் தேடியபோதுதான் மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற அன்பு டையர் இன்னமும் இந்த வையகத்தில் வாழ்வதால் எம்மீது நீ கருணை காட்டுகிறாய் என்பதை உணர முடிகிறது.

அதோ! கொடிய கொரோனாவால் நாளாந்த வருமானம் இழந்து, ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது என்று ஏங்குகின்றவேளை, உணவுப் பொருட்களை வாங்கி அதைப் பொதி செய்து வீடு வீடாகக் கொண்டு சென்று வழங்குகின்ற அந்த உத்தமப் பணி கண்டு இறைவனால் இரங்காமல் இருக்க முடியவில்லை.

அதேநேரம் இன்னமும் எங்கள் வீட்டில் உலை அடுப்பேறவில்லை என்று மெளனமாய்க் கண்ணீர் விடுபவர்களும் நம்மத்தியில் மறைந் திருக்கக் கூடும்.

அவர்களையும் கண்டறிந்து எல்லோரும் பசியாற உதவுவோம்.

ஒரு தரப்பிற்கே எல்லா உதவியும் என்ற நிலையை மாற்றி, அவர்கள் அவர்களுக்கும் இவர்கள் இவர்களுக்குமாக பகுத்துக் கொடுத்து பல்லுயிர் காப்போம்.

இவ் உயரிய அறம் கண்டு அந்தப்பரம்பொருள் நிச்சயம் மனம் மகிழ்ந்து மானிடத்தைக் காப்பான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link