செம்மணி மனிதப்புதைகுழியை சிங்கள மக்கள் அறிய வேண்டும்
Share
நம் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அதன் காரணம் குறித்தும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்த சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில், இலங்கையில் பத்திரிகைப் பயங்கரவாதமே உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது.
அதாவது இலங்கையில் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கும் சமாதானம் ஏற்படுவதைத் தடுப்பதிலும் பத்திரிகைகள் கடும் பங்காற்றியுள்ளன என்பது குறித்த சர்வதேச தொண்டு நிறுவனத்தின் முடிவு.
ஆம், சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.
இராணுவ முகாம்களிலிருந்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதும் போர் விமானங்கள் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளைப் போட்டு விட்டு விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிப்பதும் அதனைச் சிங்களப் பத்திரிகைகள் இன வன்மத்துடன் செய்தி ஆக்குவதும் வழமையாகியது.
அந்நிலைமை தமிழர்களுக்கு எதிரான மனநிலையை சிங்கள மக்களிடையே ஏற் படுத்தியது. உண்மையில் படைத்தரப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அப்பாவித் தமிழ் மக்கள். ஆனால் அந்த உண்மையை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் சிங்கள மக்களிடம் வெளிப்படுத்தவில்லை.
எனினும் எவ்வளவோ அழிவுகளின் மத்தியில் இப்போது நாடு சமாதானம் பற்றிச் சிந்திக்கின்ற கட்டத்துக்கு வந்துள்ளது.
ஆயினும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை.
அதிலும் குறிப்பாக, வன்னி யுத்தத்தின் போது நடந்த தமிழின அழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன? என்பன தொடர்பில் இன்னமும் தமிழ் மக்கள் ஆற்றொணாத் துன்பத்துடன் வாழ்கின்றனர்.
இருந்தும் தமிழ் மக்களின் அவலங்களை சிங்கள மக்கள் எந்தளவு தூரம் அறிந்துள்ளனர் என்பது இன்னமும் கேள்விக்குரியதே.
ஆம், இப்போது செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 350க்கும் மேற்பட்ட மனித என்புத் தொகுதிகள் கூட்டாகவும் தனித்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஆயினும் இந்தத் தகவல்களை சிங்கள ஊடகங்கள் மற்றும் சிங்கள சமூக வலைத் தளங்கள் சிங்கள மக்களிடம் சேர்ப்பித்தனவா என்றால் இல்லை என்பதே அதற்கான பதில்.
கூடவே செம்மணி மனிதப் புதைகுழியின் கொடூரத்தை நம் தமிழ்த் தரப்புகளேனும் சிங்கள மக்களிடம், அவர்களின் மொழியில் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்தனவா என்றால், அதற்கும் இல்லை என்பதே பதில்.
எனவே தயவுசெய்து செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்படுகின்ற மனித என்புத் தொகுதிகள் பற்றி அனைத்து ஊடக ங்களும் சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது விடயத்தில் தமிழ்த் தரப்புகளும் விசேட செயன்முறைகளைக் கையாண்டு எங்களின் அவலத்தை – செம்மணியின் துயரத்தை சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இஃது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்குக் கட்டாயமானதாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


