Type to search

Editorial

பருவ காலம் நமக்கு தருகின்ற செல்வங்கள்

Share

பருவ காலம் என்பது நமக்கு கடவுள் தருகின்ற வாழ்வியல் உத்தரவாதம்.

ஆம், பருவ காலங்கள் இயற்கையின் கொடைக்கான அறிவிப்புகள். அதாவது மனித வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பருவ காலங்கள் நமக்குத் தரு கின்றன.

எனினும் அவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக இயற்கை தருகின்ற ஏகப்பட்ட செல்வங்கள் வீணாகிப்போகின்றன.

உண்மை. இப்போது இருக்கின்ற பருவகாலத்தில் வேப்ப மரங்கள் பூக்கின்றன. மாமரங்கள் காய்க்கின்றன. பனைகள் தம் இனப்பெருக்கத்திற்கு ஆயத்தமாகிவிட்டன.

எனினும், இவை பற்றி நாம் பெரிதாக சிந்திப்பதில்லை. உதாரணத்துக்கு நம் சூழலில் உள்ள வேப்ப மரங்கள் பூத்துள்ளன. வேப்பம் பூக்கள் மிகச் சிறந்த ஒளடதம். அதனாலேயே நம் முன்னவர்கள் வேப்பம் பூவில் வடகம் செய்து அதனை தமது உணவில் சேர்த்துக் கொண்டனர். அதனால் அவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் வேப்பம் பூ வடகத்துக்கு உலகளவில் கேள்வி உள்ளதாயினும் அந்த சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நம்மில் யாரும் தயார் இல்லை.

எனினும் அது விடயத்தில் நம்மவர்களை வழிப்படுத்தி சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவரும் இல்லாத காரணத்தால், அருமந்த வேப்பம் பூக்கள் நிலத்தில் கொட்டி மண்ணோடு மண்ணாகிப் போகின்றன.

இதுபோலவே இயற்கை பருவகாலத்தின் ஊடாக நமக்குத் தருகின்ற செல்வங்களில் பெரும் செல்வமாக இருப்பது பனைமரம்.

எங்கள் வடமாகாணத்தின் மிகப்பெரும் பலமாக இருக்கின்ற பனைவளம் பற்றி எவருமே கவனிப்பதில்லை.

இப்போது எல்லாம் பனைகளில் இருந்து எந்த உணவுப் பொருளை பெற்றுக் கொள்வதற்கும் நம்மவர்கள் தயார் இல்லை.

இதன் காரணமாக பனம் பழங்கள் நிலத்தில் விழுந்து வீணே போவதுடன் பனங் கிழங்கு, புளுக்கொடியல், ஒடியல் என்ற பனம் பொருள் உற்பத்திகளும் அருகிவிட்டன.

உண்மை. பனங்கட்டி, பனாட்டு என்பன மிக உச்சமான விலைக்கு விற்கப்படுகின்றன. எனில் எங்கள் பனைவளம் தக்க முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது.

எனவே இயற்கை நமக்குத் தருகின்ற இயற்கை வளங்களை தக்க முறையில் பயன் படுத்தி – பதப்படுத்தி அவற்றை எமது உணவாகவும் உழைப்பின் வருமானமாகவும் ஆக்குவதற்கு நாம் எங்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

இது விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அமைப்புகள் களத்தில் இறங்கி மேற்குறித்த உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

இதைச் செய்வதன் மூலம் இயற்கை எமக் குத் தருகின்ற கொடைகள் மூலம் உச்சமான பயனை அடைய முடியும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link