நல்வழிப்படுத்த முயலும் பொழுது
Share
மனிதன் ஒவ்வொருவனும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ் வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொரு வன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது.
எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தைசெல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை.
இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள்தான். ஆனால் ஒருவர் போல் மற்றவர்கள் மாறுவதற்கு முயற்சி செய்யவில்லை. ஒவ் வொருவருமே தமது பாணியில் பயணித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
துர்அதிர்ஷ்டவசமாக நாம் எமது பிள்ளைகளையும் மாணவர்களையும் வழிநடத்த அல்லது நல்வழிப்படுத்த முயலும் பொழுது இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பேசும் பழக்கத்தை வளர்த்து வைத்திருக்கின்றோம். இது ஒரு வேதனையான உண்மை.
“அவனைப்பார் 4 மணிக்கு எழும்பிப்படிக்கின்றான். ஆனால் நீ”, “அவனுடைய எழுத்தைப் பார் உன்னுடைய எழுத்தையும் பார்..” , “அவன் எழும்பி எவ்வளவு உசாராய் கதைக்கின்றான் அவனைப் பார்த்து பழகு..” , “அந்தக் காலத்திலே நான் என்ன மாதிரி எல்லாம் செய்தனான் ஆனால் நீ”
இவ்வாறாக ஒருவனைப்போல இன்னொருவனை புடம் போட்டு மாற்றுவதற்கு கடுமையாக முனைந்து நிற்கின்றோம். எதற்கு எடுத்தாலும் ஒப்பிட்டு கதைப்பதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்டிருக்கின்றோம்.
ஒருவனுக்கான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அவன் சார்ந்த அவனது நிறை குறைகள் சார்ந்ததாக அவனது சுபாவம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே அன்றி ஒப்பிடும் பொறிமுறையாக இருக்க முடியாது.
ஒப்பிட்டு அறிவுரை சொல்ல முயல்வது அவர்களை காயப் படுத்தி பல எதிர்மறையான விளை வுகளை ஏற்படுத்தி விடுவதுடன் குளிக்கப் போய் சேறு பூசிய கதை போல அல்லது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதை போல் ஆகிவிடுவதுடன் அது அவர்களின் பல சுகாதாரப் பிரச்சினைகளை யும் தோற்றுவிக்கும்.
ஒப்பிட்டுப் பேசுவதால் ஏற்படும் தீய விளைவுகளை வரிசைப்படுத் திக் கொண்டே போகலாம். அவற் றில் முக்கியமானவை மனக் குழப்பம், விரக்தி, பொறாமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, கற்றல் செயற்பா டுகளில் ஆர்வக் குறைவு போன்றவை யாகும்.
சகோதரர்களிடையே பொறாமை உணர்வு வளர்வதற்கும் இது காரணமாகி விடுகின்றது. பிள்ளைகளை வழி நடத்தும் போது எமது முக்கியமான இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.
இந்த இலக்கு பரீட்சைகளில் சித்தி பெறுவதா? உயர் கல்வி கற்பதா? போட்டிகளில் வெற்றி பெறுவதா? ,செல்வம் சேர்ப்பதா? அல்லது நல்ல மனம் கொண்ட மனிதாபிமானமுள்ள ஒரு மனி தனாக உருவாக்குவதா? என் பதை தீர்மானிக்க வேண்டும்.
ஒரு நல்ல மனிதனை உரு வாக்குவதற்கு ஒப்பிட்டுப் பேசப் படும் பேச்சு உதவியாக அமையாது.
சுயமாக ஒருவன் சிந்தித்து வாழ்வில் உயர்ச்சி அடைவதற்கு அவனில் உள்ள திறமைகள் அடையாளப்படுத்தப்பட்டு ஊக்கப் படுத்தப்பட வேண்டும். அந்தத் திசையிலே அவனை முன்னே றுவதற்கு அவன் சார்ந்த அறி வுரைகளும் வழிகாட்டல்களும் உதவியாக இருக்கும். ஆனால் இது ஒரு பொழுதும் ஒப்பிட்டுப் பேசும் பேச்சாக அமைந்து விடக் கூடாது.
ஒருவரை விமர்சித்து மதிப் பிட்டு அவருடன் முரண்பட்டு கோபமுற்று போட்டியிட்டு அவ ரின் நடத்தைகளை மாற்ற முய ன்று வாதிட்டு எமது மன அமை தியையும் நேரத்தையும் மன மகிழ்வையும் விரயமாக்குவது ஆரோக்கியம் ஆகாது.
அதற்குப் பதிலாக அவரை அவரது தனித்துவங்களுடனும் குணாதிசயங்களுடனும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சேர்த்துக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பயன் தரும்.
வாதிட்டுப் பேசும் வார்த்தைகளிலும் பார்க்க மௌனங்கள் பலமானவை. பல அர்த்தங்கள் பொதிந்தவை. மௌனங்களும் மன்னிப்புகளும் பலரை சிந்திக்க வைத்து நல்வழிப்படுத்தும்.
Dr. சி. சிவன்சுதன்,
பொது வைத்திய நிபுணர்