Type to search

Editorial

மக்களின் குறைகளை தீர்ப்பதற்குப் பதிலாக…

Share

தமிழ் மொழியில் அரசன், அரசு, அரசாங்கம் என்ற சொற்பதங்கள் உள்ளார்ந்தமாக வித்தியாசமான பொருளைத் தந்து நின்றாலும் வெளியரங்கில் ஒத்தபொருளை உணர்த்துவதாகவே கொள்ளப்படுகின்றது.

முடியாட்சி நிலவிய காலத்தில் அரசன் என்பவனே ஆட்சிக்குரியவன். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்தக் குறைகளைத் தீர்த்து வைத்து நல்லாட்சியை வழங்குவது அரசர்களின் கடமையாக இருந்தது.
எனினும் அநீதியான அரசர்களும் ஆட்சி செய்துள்ளனர்.
அத்தகைய அரசர்கள் மக்கள் மனங்களில் நின்று நிலைக்க முடியாமல் அழிந்தொழிந்து போயினர்.
மாறாக நீதி வழுவாது ஆட்சி செய்த மன்னர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
கன்றை இழந்த பசுவுக்காக தன் மகன் வீதிவிடங்கனை தெருவில் கிடத்தி தேர்க்காலால் மிதித்து, மரண தண்டனை வழங்கிய மனுநீதிச் சோழ மன்னனின் மாண்பு இன்னமும் உயிர் வாழ்கிறது.

இவை ஒருபுறமிருக்க, இன்றைய ஜனநாயகப் பரப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் ஆட்சியிலும் நல்லாட்சியும் கொடூர ஆட்சியும் இருக்கவே செய்கின்றன.
மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்கள் மீது அதீத வரிச்சுமை விதிப்பதையும் மக்களின் இயல்பு வாழ்வைக்குழப்பும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குவதையும் தொழிலாகக் கொண்ட ஆட்சியாளர்களால் பொதுமக்களின் வாழ்வு இன்னல் நிறைந்ததாக ஆகிவிடுகிது.


இதற்கு நல்ல உதாரணம், கொரோனாத் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வது என அரசாங்கம் எடுத்த தீர்மானத்தைக் குறிப்பிடலாம்.
ஏலவே கொரோனாத்தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் சடலங்களை எரிப்பது என்ற அரசின் தீர்மானம் முஸ்லிம் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் குழப்பத் தையும் ஏற்படுத்தியிருந்தது.

இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணாக சடலங்களை எரிப்பதை முஸ்லிம் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதையடுத்து மாற்றுவழி தேடிய அரசாங்கம் புதைப்பதற்கு அனுமதி வழங்கியதாயினும் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வது எனத் தீர்மானித்தபோது, அது இன்னொரு பிரச்சினையை – குழப்பத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட நிலைமை மேலும் மோசமாகி இரணைதீவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆக, ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்ற ஆட்சியாளர்களின் மனநிலை எவ்வாறாக உள்ளதென்பதை இதிலிலிருந்து எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

அதாவது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிது புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு, மக்களின் இயல்பு வாழ்வைக் குழப்புகின்ற மறச்செயல் ஆட்சிப்பீடத்தில் உள்ளதெனில் மக்களின் குறைகள் தீர்க்கப்படுமா என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link