மின்சார சபைக்கு பாரிய நட்டம்
Share
கடந்த 2015 தொடக்கம் 2019 வரையில் இலங்கை மின்சாரசபை 181.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும், தேசிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இந்தக் கால எல்லைக்குள் புனரமைக்கப்படாதமையும், மின்சார கட்டணங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யாதமை மற்றும் மின்சார சபைக்கு அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையுமே பிரதான காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் இலங்கை மின்சார சபை எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள், நட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகையில்,
இந்த நெருக்கடிக்கு நீர்மின் உற்பத்தியில் ஆர்வம் காட்டாமை, டீசலுக்காக மாத்திரம் 100 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ள போதிலும் மின்சார கட்டணத்தில் விலை அதிகரிப்பு செய்யாதமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013 ஆம் ஆண்டு நுரைச்சோலை லக்- விஜய மின்நிலையம் உருவாக்கப்பட்ட பின்னர் இன்னமும் எந்தவொரு மின் உற்பத்தி நிலையமும் புனரமைக்கப்படவில்லை.
மாறாக டீசல் பாவனையில் மின் உற்பத்தி செய்யப்பட்டே வருகின்றது. இதற்காக ஒரு அலகு மின் உற்பத்திக்கு 23. 29 ரூபாய்கள் செலவானாலும் மக்களிடம் ஒரு அலகு மின்னுக்காக 16.83 ரூபாய் என்ற அடிப்படையில் அறவிடப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்துமே அதிகரித்துள்ள போதிலும், மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
அதேபோல் மின்சார சபையின் பல்வேறு செயற்பா டுகள் தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றமையும், அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இருப்பதும் கூட மின்சார சபை நட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்றுவரை 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். எனவே இந்த செயற்பாடுகள் காரணமாகவே இலங்கையில் மின்சார சபை நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.