மன்னா வேண்டாம் என்றொரு குரல் மன்னனைத் தடுக்கிறது…
Share
மன்னன் சாலமனின் சபைக்கு ஒரு விசித் திரமான வழக்கு வருகிறது.
இரண்டு தாய். ஒரு குழந்தை. இருவரும் குழந்தை தமது என வாதிக்கின்றனர். அவர்களின் வாதம் மன்னன் சாலமனைக் குழப்புகிறது.
ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் இருக்க முடியும். இரண்டு தாய்க்கு ஒரு குழந்தை எப்படிச் சாத்தியமாகும். மன்னன் சிந்திக்கின்றான்.
ஈற்றில் ஒரு முடிவுக்கு வந்த மன்னன் குழந்தையை ஆளுக்குப் பாதியாகக் கொடுப் போம் எனக் கூறி, தன் உடைவாளை எடுக்கின்றான்.
அந்நேரம் ஒரு குரல் மன்னா! வேண்டாம் என்று மன்னனைத் தடுக்கிறது. மன்னன் சாலமன் உண்மைத் தாய் யார் என்று இனங்கண்டு கொள்கிறான்.
அன்புக்குரிய தமிழ் மக்களே! இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி.
ஐந்தாம் திகதி பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் முடிவுகள் வெளியாகி இருக்கும்.
அந்நேரம் கிடைத்த முடிவுகளுக்கு நாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்போம்.
கிடைத்த முடிவுகளுக்கு என்ன காரணம் என்று எங்கள் ஊடக ஆய்வாளர்கள் பதவுரை செய்வார்கள்.
அதுவரைக்குமே எங்களின் ஆர்வங்கள். அதன் பின்னர் வென்றவர்களே ஐந்து ஆண்டு களுக்கு அதிபதிகளாவர்.
ஆக, ஓகஸ்ட் 5ஆம் திகதி நாம் வழங்கு கின்ற புள்ளடிகள்தாம் எம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.
எனவே நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் நாம் யாரை ஆதரிக்கப் போகின்றோம் என்ற தீர்மானம் இங்கு மிகவும் முக்கியமானது.
தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய தீர்மானம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்ப வர்கள் அந்தத் தீர்மானத்தை உடைக்கின்ற வகையில் பிரசாரம் செய்வர்.
அந்தப் பிரசாரம் செல்லுபடியாகும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் இல்லாமல் இல்லை.
எதுவாயினும் எம் தமிழ் மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அதாவது மன்னன் சாலமன் எங்ஙனம் உண்மையான தாயை இனங்கண்டானோ, அதுபோல நாமும் நேர்மையான தமிழ்த் தலைமையை இனங் கண்டு அத்தகையவர்களை நம் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றுக்கு தெரிவு செய்வோம்.