பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரம்
Share
பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது.
பொதுவில் தேர்தல்கள் நியாயமாகவும் நீதியாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் கட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு – உரிய விருப்பு வாக்குகள் கணிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில், அத்தனை நடவடிக்கைகளும் செம்மையாக இடம்பெறுவதை உறுதி செய்வதும் கட்டாயமானதாகும்.
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அத்தி பாரம். மக்கள் வழங்குகின்ற தீர்ப்பு. மக்கள் வழங்கும் தீர்ப்பில் மாற்றம் செய்யப்படுமாயின், தேர்தல் என்பது அர்த்தமற்றதாகி விடும்.
எனவே தேர்தல்கள் நீதியாக நேர்மையாக நடைபெறுவதுடன் எந்தவித நம்பிக்கையீனங் களும் ஏற்படாத வகையில் தேர்தல் கடமை கள் நடந்தாக வேண்டும்.
இவை ஒருபுறமிருக்க, தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் கூறுகின்ற பொய்யுரைகள், போலிக்குற்றச்சாட்டுக்கள், மனிதநேய மற்ற விமர்சனங்கள் என பலவாறான குத்து வெட்டுக்கள் குழப்பங்கள் நடைபெறும்.
இருந்தும் நல்லவர்கள் ஒருபோதும் பிறர் மீது அபாண்டமான பழியைச் சுமத்த மாட் டார்கள். அவ்வாறு அவர்களால் அபாண்டமான பழியைச் சுமத்தவும் முடியாது.
ஆக, இங்குதான் பொதுமக்கள் அரசியல் வாதிகளை எடைபோடத் தெரிய வேண்டியவர் களாக உள்ளனர்.
எதுவும் எப்படியும் பேசலாம். எழுதலாம். கீழ்த்தரமாக விமர்சிக்கலாம் என்ற மன நிலையை உடையவர்கள், தப்பித்தவறிப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதைப் பொதுமக்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பச்சை பொய் சொல்பவர்கள், தகவல்களை வேண்டுமென்றே திரிவுபடுத்துபவர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால் அவர்களிடம் இருந்து வருகின்ற அத்தனை வார்த்தைகளும் பொய்யாகவும் உருட்டுப் புரட்டாகவுமே இருக்கும்.
இத்தகையவர்கள் நல்லவர்கள் என்ற வகுதிக்குள் அடங்காதவர்களாகி விடுவது டன் இத்தகையவர்களின் உரைகள் மீதான நம்பகத்தன்மைகளும் குறைவாகவே இருக்கும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
இதற்கு மேலாக சில பொது அமைப்புக்கள் எழுந்தமானமாக – தன்னிச்சையாக அரசியல் கட்சி சார்ந்து அறிக்கை விடுவதற்குத் தயா ராக இருப்பதான தகவல்கள் வெளியாகியுள் ளன.
அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்ற உரிமைகள் பொது மற்றும் சமூக அமைப்புகளுக்கு இருக்குமாயின், உரிய ஒழுங்கு முறையில் கூட்டங்களைக் கூட்டி அனைத்து அங்கத்த வர்களினதும் கருத்தறிந்து அவர்களின் ஒப்புதல் பெற்றுக் கொண்டே தமது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
இதைவிடுத்து தலைவர் தனியாகவும் செயலாளர் தனித்தும் அறிக்கை விடுவதானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் துரோகத்தனமாகும்.