Type to search

Editorial

உயிர் இருந்தால்தான் எதையும் செய்ய முடியும்

Share

உன் உயிரை விட வேறு எதுவும் பெறுமதியான செய்தியாகிவிடாது
என்பது லண்டன் பி.பி.சியின் தாரக மந்திரம்.

ஆக, உயிருக்கு நிகராக எதுவும் இருந்து விட முடியாது.

எனினும் அந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உலகம் முழுவதையும் கொரோ னாத் தொற்று ஆட்டிப் படைக்கிறது.

எனவே கொரோனாத் தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதுதான் இன்றைய முதன்மையான பணியாகும்.

உலகம் முழுவதையும் சங்காரம் செய்யத் துடித்து நிற்கின்ற கொரோனாத் தொற்று இலங்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை எவரும் மறுத்துவிட மாட்டார்கள்.
அதேநேரம் காலப் பிழை போல இலங்கையில் கொரோனாத் தொற்று இனங்காண்பதற்கு முன்பதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் தேர்தலை நடாத்தாமல் விட்டால் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் கூடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றாகிவிடும்.

இங்குதான் கொரோனாவைத் தடுப்பதா? அல்லது பாராளுமன்றத் தேர்தலை நடத்து வதா? என்ற கேள்வி எழுகின்றது.

இந்தக் கேள்விக்கான பதில் உயிர் இருந்தால் மட்டுமே ஏனையவை தேவையாக இருக் கும் என்பதாகும்.

ஆக, பாராளுமன்றத் தேர்தல் என்பதற்கு அப்பால் கொரோனாத் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதுதான் ஒரு நாட்டின் தலையாய கடமையாக இருக்கும்.

அதேநேரம் கொரோனாத் தொற்றைத் தவிர்ப்பதற்காக – தடுப்பதற்காக இலங்கை முழுமையிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கானது 18 மாவட்டங்களில் தளர்த்தப்பட் டுள்ளது.

இவ்வாறு ஊரடங்கைத் தளர்த்துவது பொருத்தமானதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அதிலும் யாழ்.மாவட்டத்தில் குறைந்தது ஏழ நாளுக்கேனும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.

ஆக, இவற்றைப் பார்க்கும்போது யாழ். மாவட்டத்தில் ஊரடங்கைத் தளர்த்துவதில் அரசாங்கம் அவசரப்பட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றும்.

எது எவ்வாறாயினும் கொரோனாத் தொற்று என்பது இனம், மதம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, மனித உயிர்களைக் காவு கொள்ளக்கூடிய உயிர்க் கொல்லி யாகும்.

ஆகையால் இந்த பேராபத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதே முதன்மையான விடயம்.

ஆகவே ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது என்பதற்காக மக்கள் வீதிக்கு வர வேண்டும் என்ற கட்டாயங்கள் ஏதுமில்லை என்பதால் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை தம்மளவில் அமுலாக்க வேண்டும்.

இதுவே கொடிய கொரோனாவில் இருந்து மனித உயிர்களைப் பாதுகாக்கும் உபாயமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link