தனிமைப்படுத்தலில் தவறு ஏற்படக்கூடாது
Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முன்தினம் 14ஆம் திகதி எட்டுப் பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
எட்டுப் பேர் என்ற எண்ணிக்கை அதிர்ச்சியைத் தரக்கூடியது.
குறித்த எட்டுப் பேரும் ஏலவே தனிமைப்படுத்தப்பட்ட வகுதிக்குள் இனங்காணப்பட்டவர்கள் என்பதால் அது தொடர்பில் அச்சப்படாமல் இருக்க முடியும்.
எனினும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த எட்டுப் பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்
என்பது தனிமைப்படுத்தலில் ஏற்பட்ட தவறு காரணமாக தொற்றுப் பரவியதா என்ற கேள் வியை எழுப்பியுள்ளது.
அதாவது சுவிஸில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த போதகர் கொரோனாத் தொற்றை பரப்பினர் என்பது கண்டறியப்பட்ட உண்மை.
இதனால் அவரோடு பழகியவர்கள், உடன் இருந்தவர்கள், அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினர் தனிமைப்படுத்தல் என்ற நடை முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இங்கு தனிமைப்படுத்தல் என்பதில் ஏலவே ஆறு பேர் இனங்காணப்பட்டனர்.
இவர்கள் ஆறு பேரும் சுவிஸ் போதகரிடம் இருந்து நேரடியாக கொரோனாத் தொற்றுக்கு ஆளானவர்கள் என அனுமானிக்க முடியும்.
ஆனால் நேற்று முன்தினம் இனம்காணப்பட்ட எட்டுப் பேரும் தனிமைப்படுத்தலின்போது கொரோனாத் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று அனுமானிப்பதற்கு மருத்துவக் காரணி கள் சான்றாக உள்ளன.
அதாவது தொற்றில் இருந்து தொற்று என்ற கட்டம் கடந்து இரண்டாம் நபரில் இருந்து மூன்றாம் நபருக்குத் தொற்றுப் பரவியுள்ளது என்று அனுமானிக்க முடியும்.
எனவே இங்கு தனிமைப்படுத்தலின்போது எல்லாம் ஒன்று எனக் கருதியமையால் முதற் கட்டத்தில் பாதிக்கப்படாதவர் இரண்டாம் கட்டத்தில் பாதிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக வேண்டியதாயிற்று.
எனவே தனிமைப்படுத்தல் என்ற விடயத்தில் இனியேனும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
இங்கு தனிமைப்படுத்தல் என்பது தனித் தனியாக்குவதா? அல்லது தொற்று ஏற்படலா மென்று கருதப்படுகின்ற அத்தனை பேரையும் ஒன்றாகத் தனிமைப்படுத்துவதா? என்ற கேள்வி எழும்போது தனித்தனியாக வைத்திருப்பது நோய்த் தொற்றுக்காளனவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவும் என்பதுடன்,
அதற்குள் தனி மனித உரிமை விடயங்களும் உண்டு என்ற வகையில் தனிமைப் படுத்தல் என்ற விடயத்தில் எவரும் அசமந்தம் கொள்ளாமல் உரிய ஏற்பாடுகளைச் செய்வதே நன்மை பயப்பதாகும்.