புத்தாண்டிலேனும் புதிய அத்தியாயம் பிறக்கட்டும்
Share
இன்று தமிழ் சிங்களப் புத்தாண்டு. அறுபது ஆண்டுகள் என்ற காலச்சக்கரத்தில் இன்று சார்வரி ஆண்டு பிறக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்பது தனித்து காலச் சக்கரத்தின் சுழற்சி மட்டுமல்ல.
மாறாக புத்தாண்டில் மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து இறை வழிபாடாற்றி தானதர்மம் செய்து தத்தம் தொழில் சார்ந்து நாள் வேலை ஆரம்பித்து பழைய துன்பங்களை மறந்து புத்துணர்வோடு வாழ்வை ஆரம்பிக்கின்ற நாளாகவும் புத்தாண்டு அமைகிறது.
எனினும் காலப் பிழை போலும், இன்று பிறக்கின்ற புத்தாண்டில் ஆலயங்களில் வழிபாடு கள் இல்லை. சொந்தங்கள் சேர்ந்து புத்தாண் டுப் பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக இந்த அபத்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மனித வாழ்வு என்றும் ஒரே மாதிரியாக இருந்துவிடுவதில்லை. ஊரில், நாட்டில், உல கத்தில் ஏற்படக் கூடிய அசாதாரண நிலைமைகள் தனி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற் படுத்தி விடுகிறது.
அந்த வகையில் கொரோனாத் தொற்று என்பது முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் உலகம் முழுமையிலும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி நிற்கிறது.
இங்குதான் மனித சமூகம் தன் வாழ்வையும் இருப்பையும் காப்பாற்றுகின்ற மனத் திடத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
மனிதர்களுக்கு மனிதர்கள் உதவுகின்ற மானிடநேயத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற காலமாக இது அமைந்துள்ளது.
எவ்வளவுதான் விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் வானுயர்ந்து நின்றாலும் இவற் றையும் கடந்த சக்தி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது என்ற உண்மையை நாம் தெட் டத்தெளிவாக உணர முடிகிறது.
ஆகவே இன்று பிறக்கின்ற தமிழ் – சிங்களப் புத்தாண்டில் தர்ம வாழ்வு வாழ்வதென உறுதி செய்வதே காலத்துக்குக் காலம் ஏற்படுகின்ற உலகப் பேரழிவுகளில் இருந்து நாம் மீண்டெழுவதற்கான ஒரே வழியாகும்.
இதுதவிர இது சிங்கள நாடு. இங்கு பெளத்தத்துக்கே முன்னுரிமை. சிறுபான்மை மக்கள் வாழ்ந்து விட்டுப் போகலாம். அவர்கள் உரிமை பற்றிச் சிந்திக்கக்கூடாது என்றெல்லாம் கூறுகின்ற சிறுமைத்தனங்களை விடுத்து;
ஒரு வைரஸ் கிருமிக்கு ஈடுகொடுக்க முடியாத இந்த உலகில் மக்களைத் துன்பப்படுத்தா மல், அவர்களை அவல வாழ்வுக்கு தள்ளிவிடாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு இறைவன் மீது நம்பிக்கை கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க இலங்கைத் திருநாடு இப் புத்தாண்டில் சங்கற்பம் பூண வேண்டும்.