முகக் கவசம் அணிந்து பயணிப்பது கட்டாயம்
Share
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் வழமைக்கு திரும்ப வுள்ள நிலையில் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொதுச் சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனப் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
திங்கட்கிழமையில் இருந்து போக்கு வரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளதாக அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
சகல பஸ்களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.