முழுநேரப் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அடையாள அட்டை நடைமுறை இன்று முதல் அமுலில் இருக்கும்
Share
முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைக் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் அமுலில் உள்ள கடுமையான பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவடையும்.
இன்று அதிகாலை முதல் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தடை செய்யும் வகையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டை இறுதி இலக்கத்தின் பிரகாரம் பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வரும்.
அத்துடன், தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கை ஒத்த பயணக் கட்டுப்பாடு நடை முறையில் இருக்கும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
இன்று திங்கட்கிழமை முதல் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாதபோது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியே செல்லலாம்.
ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9) உள்ளவர்கள் ஒற்றை இலக்க நாட்களில் வெளியே செல்லலாம். மற்றும் இரட்டை எண்கள் (0, 2, 4, 6, 8) உள்ளவர்கள் இரட்டை இலக்க நாட்களில் வெளியே செல்லலாம்.
உதாரணத்துக்கு இன்று 17ஆம் திகதி ஒற்றை இலக்க நாளாகும். இதன் பிரகாரம் இன்று காலை முதல் இரவு 11 மணி வரை ஒற்றை இலக்கத்தை அடையாள அட்டை இறுதியில் கொண்டுள்ளவர்கள் குடும்பத்தில் ஒருவர் வெளியே செல்ல முடியும்.
மே 31 வரை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நேரங்களில் மீண்டும் இவ்வாறான அடையாள அட்டை இறுதி இலக்கத்தின்படியான நடமாட்ட அனுமதி செயற்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.