வாள்வெட்டுடன் தொடர்புடைய ஒருவர் யாழில் நேற்று கைது
Share
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்ஸில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த ஒருவரால் பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், கிளிநொச்சியில் தலை மறைவாகியிருந்து அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்ட நிலையில் அவரது சகா கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அவரது கொக்குவில் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சிறப்பு அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் நீர்வேலி, இணுவில், உடுவில், மானிப் பாய் மற்றும் ஓட்டுமடத்தில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.