Type to search

Headlines

வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது

Share

சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும்.

எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது 1981 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டமாகும். இந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது பரிசோதகர்களாவர்.

எனவே சட்டத்தின் அடிப்படையில் சுகாதார அமைச்சருக்கு எமக்கு அந்த அதிகாரங்களை வழங்க முடியும். அவ்வாறில்லை என்றால் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டாலும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு எமது கட்டளைகளை சவாலுக்குட்படுத்த முடியும்.

சுகாதார அமைச்சோ அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமோ இதனை இது வரையில் நிறைவேற்றவில்லை. அநாவசிய அதிகாரங்களை நாம் கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு அநாவசியமான எவ்வித அதிகாரத்தையும் நாம் கோரவில்லை.

எமது அதிகாரங்களை சட்ட ரீதியானதாக உறுதிப்படுத்தும் வரை எம்மால் கடமைகளில் ஈடுபட முடியாது. 16 ஆம் திகதி கொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகளிலிருந்தும் சனிக்கிழமை அனைத்து தொற்று நோய்களிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அடுத்து வரும் நாட்களிலேனும் இதற்கான தீர்வு காணப்படாவிட்டால் எமது தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளோம்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் 3 சந்தர்ப்பங்களில் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் இருந்தாலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதற்கு இடமளிக்காமல் அழுத்தம் பிரயோகிக்காமல் தடையை ஏற்படுத்துகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருடன் 3 கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன. தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானங்களை எடுக்கும் நேரடி அதிகாரம் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அந்த அதிகாரங்களை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடிய ஒன்றாகும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link