யாழில் ஊரடங்கை தளர்த்த முடியாது
Share
தற்போதையை சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண யாழ்.பலாலியில் வைத்து தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தலைமையகத்தில் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் விமானப் படையினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களினால் ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் கேட்கப்பட்டபோதே இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இம் மாவட்டத்திலிருந்து வைரஸ் தொற்றுக்கு உள்ளான அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதிக எண்ணிக்கை எனும்போது ஏனைய நாடுகளில் அறிக்கையிடப்படு வதைப்போன்று இல்லாவிட்டாலும் எமது நாட்டில் அறிக்கையிடப்படும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, தற்பொழுது கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் அறிக்கையிடப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக களுத்துறை மாவட்டம், கம்பஹா மாவட்டம் அதற்கு அடுத்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுகிறது.
சனத்தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது யாழ்ப்பாணம் மாவட்டம் அதிகளவான மக்கள் வசிக்கும் பிரதேசமாகும்.
எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதை நாம் விரும்பவில்லை.
எனவே, மக்களுக்கு ஓரளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் நோய் பரவாமல் சரியாக அதனைக் கட்டுப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்வரை ஊடரங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
யாழ்.குடாநாட்டு மக்களிடம் இரண்டு விடயங்களை முன்வைக்கின்றோம். நாம் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய வீடுகளுக்குள் இருங்கள்.
அதேநேரம், யாராவது ஒருவருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் அதுபற்றி உண்மையை மறைக்காது உரிய தரப்புக்கு தெரிவியுங்கள்.
நீங்கள் யாரைச் சந்தித்தீர்கள், எங்கு சென்றீர்கள் போன்ற உண்மைத் தகவல்களை வழங்குங்கள் என்ற கோரிக்கையையும் நான் முன்வைக்கின்றேன்.
அப்படி உண்மையைத் தெரிவிக்கும் போது அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும்.
நாம் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கின்றோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது மக்களின் பொறுப்பாகும் என்றார்.