இராணுவமயமாக்கலினால் பொதுத் தேர்தலுக்கு ஆபத்து ஏற்படலாம்
Share
நாட்டில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் அச்சுறுத்தப்படலாம் என்கிற அச்சநிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, சட்ட நிபுணரும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவருமான சட்டத்தரணி லால் விஜேநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
இலங்கை சுங்கப் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டினை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என எதிரணியினர் கடுமையாக விமர்சித் திருந்ததோடு இராணுவ மயமாக்கலுக்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் குறிப்பிட் டுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இராணுவமயமாக்கலின் ஊடாக மக்களின் வாக்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம்.
எமது நாட்டில் சுயாதீன, நீதியான தேர்தல்களே அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன.
பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றும் மிக மோசமாக நடத்தப்பட்ட சந்தர்ப்பமும் உள்ளது. அவ்வாறு இந்த தேர்தலை நடத்த முனைந்தால் நாடு மீள ஆபத்தையே சந்திக்கும். தற்போது சுயாதீன, நீதியான தேர்தலை நடத்த முடியும்.
1931ஆம் ஆண்டிலிருந்தே எமது மக்கள் தேர்தலுக்குப் பழக்கப்பட்டவர்கள். தேர்தலின் ஊடாக இலங்கையைப் போல அரசாங்கங்களை மாற்றியமைத்த வேறு நாடுகள் இல்லை.
அரசியல் அதிகாரிகள் இந்த தேர்தலில் தலையீடு செய்து மாற்ற முனைவதை தடுத்தால்தான் சுயாதீன தேர்தலை எதிர் பார்க்க முடியும். அதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
தற்சமயம் இராணுவ மயப்படுத்தல் இடம் பெற்று வருவதைப் பார்க்கின்றபோது மக்கள் மத்தியில் இப்படியான சந்தேகமும் எழுந்துள்ளது.
அச்சுறுத்தி, பயத்தை ஏற்படுத்தி வாக்குகளை சூறையாடும் முயற்சி இடம்பெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என்றார்.